கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Tuesday, March 21, 2006

'நாறுவது மனம்'- பின்னூட்டங்களுக்கு பதில்.

எனது 'நாறுவது மனம்' என்ற பதிவில் வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இது.

அந்த பதிவின் முதன்மை நோக்கம் வில்சனின் கட்டுரையை முன்வைப்பதும், முடிந்தால் அதை முன்வைத்து ஒரு விவாத்தை தொடங்குவதும். ஆனால் அதற்கு முன் வெங்கட்டின் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் படித்ததால், ஜோசஃப் அவர்கள் வெளியிட்ட கருத்து குறித்து (மற்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் இதை மட்டும் முக்கியமானது என்று நினைத்ததால்) மறுப்பு மற்றும் விமர்சனத்தை முன்வைக்க நேர்ந்தது. வெங்கட்டின் பதிவு பற்றி ஒரே ஒரு விமர்சனத்தை மட்டுமே முன் வைத்திருந்தேன். அது வெங்கட் எழுதியுள்ளது போல, ஜெயஸ்ரீ பாராட்டியுள்ளது போல, விஷயம் அத்தனை எளிதானது அல்ல என்பது மட்டுமே. நான் வெங்கட்டின் நோக்கத்தை அக்கறைகளை சந்தேகிக்கவில்லை என்பதை, எனது பழைய பதிவில் அவர் பதிவை நேர்மறையாய் குறிப்பிட்டிருப்பதையும், அதற்கு முன் அவர் பதிவில் இட்ட பின்னூட்டத்திலும் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு ஒற்றை வரி விமர்சனம் அவருக்கு (யாருடய நோக்கம் என்று தெளிவாக சொல்லாவிட்டாலும்) மற்றவர்களின் நோக்கத்தை பற்றி சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
வெங்கட் எழுதியது கீழே இதாலிக்கில் தரப்படுகிறது.

வெங்கட் எழுதியது:


>வெங்கட்டின் பதிவு, அதில் தொடர்ந்த மறுமொழிகளை பார்தால், வில்சனின் கட்டுரை பெரிதாய் படிக்கப் பட்டதாக தெரியவில்லை.

நான் படித்திருக்கிறேன். அதிலிருக்கும் பெரும்பாலான விடயங்களை நான் மறுக்கவில்லை. இதையொழிக்க ஆணிவேராகிய சாதியை ஒழிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் அதை ஒழிக்கக் கைக்கொள்ளும் ஒற்றைப்படைத்தனமான வழிமுறைகளை மட்டுமே நான் விமர்சித்து, மாற்றுவழிகளின் சாத்தியங்களில் ஒன்றை முன்வைத்தேன்.

அதே ஒற்றைப்படைத்தனமான வாதங்களை நானும் மேற்கொள்ளாததால் என் வாதங்கள் முற்றாகத் திசைதிருப்பப்படுவதைக் காணமுடிகிறது. நம்மில் இன்றைய சமூகத்தில் அறிவியலின் பங்கு குறித்து தெரிந்து கொண்டவர்கள்கூட அதை புறக்கணிப்பதின் நோக்கத்தை நான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. (One can imagine very well where India might be today had it not supported 'information based' economy. The way it drastically changes the landscape is obvious be it economy, development or respect from other countries).திரு. வில்ஸனின் ஒரே ஒரு விடயத்தை மட்டும் என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை

>இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்க்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை.

பிற நாடுகளில் இதற்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைக் காண்பவன் என்ற ரீதியில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நாம் இதில் நுட்பத்தின் பயன்பாட்டில் இன்னும் இம்மிகூட முன்னேறவில்லை. இதை மறுத்து இல்லை நாம் இதில் கரைகண்டுவிட்டோம் ரீதியில் யாராவது மார்தட்டிக்கொண்டிருந்தால் ஒன்று அவர்களின் அறியாமைக்கு நான் வருத்தப்பட வேண்டும், அல்லது அவர்களின் நோக்கங்களை நான் சந்தேகிக்க வேண்டும். மற்றும் நிதிநிலை; இந்திய பட்ஜெட்டில் R&D க்கான ஒதுக்கீட்டில்

2000 : Atomic Energy
3000 : DRDO
3610 : Space
2160 : Agriculture
1750 : CSIR
1746 : DST0
534 : Biotech
2774 : UGC, etc.
1718 : Tech. Ed.
1436 : Medicine

இதில் biotech, medicine, Agri மூன்றும்தான் சுகாதாரம் சார்ந்தவை. இது இராணுவம் சம்பந்தமான space, Atomic Energy, DRDO க்கு ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவு. ஆஹா, நமக்கு இந்திய அரசு தாராளமாகப் பணம் தருகிறது என்று நினைத்துக்கொண்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். வில்ஸனின் ஒத்துக்கொள்ள முடியாத இந்த ஒரே விடயத்தைப் பற்றித்தான் என்னுடைய அக்கறையே.

எனது பதில்: வெங்கட் தனது பதிவில் சொன்னவை இந்த பிரச்சனை குறித்து சிந்திக்கத் தொடங்கும் யாருக்கும் தோன்றும் பாதையில்தான் போகிறது. ஆனால் நவீன கருவிகளை அரசாங்கம் அளிக்க வேண்டும், அரசாங்கம் நவீனப்படுத்த வேண்டும்(வெங்கட்டின் பதிவிற்கு ஏனோ இப்போது மீண்டும் போக இயலவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை அதை படிக்க இயலவில்லை) என்று சொல்வதில் மட்டும் தீர்வு இல்லை என்பதுதான், வில்சனின் கட்டுரை மற்றும் இந்த புத்தகத்தை படிப்பவர்கள் உணரக்கூடும் என்பது மட்டுமே நான் சொல்ல வருவது. வெங்கட் எழுதிய விஷயங்கள் குறித்து விரிவாய் பிறகு வருகிறேன். ஆனால் அவர் சொல்வது போல் "அறிவியலின் பங்கை" நானோ அல்லது மற்ற எவருமே புறக்கணிக்க முயலவில்லை. ஒரு வேளை அப்படி தோற்றமளிப்பதாய் நினைத்து கொண்டு, என் நோக்கத்தை வெங்கட் சந்தேகப்பட்டால், அதனால் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் இருபது ஆண்டுகளாய் துப்புரவு தொழிலாளர்களோடு பிறந்து, அவர்களுடன் கலந்து, களப்பணி ஆற்றி வருபவர்களின் நோக்கங்களை, கணணி முன்னால் உட்கார்ந்து கொண்டு சந்தேகப்பட்டால், அது ரொம்ப ரொம்ப ஓவராய் இருக்கும்.

அறிவியல், தொழில்நுட்பம், நவீனம் எதன் பங்கையும் நான் மறுக்கவில்லை. நிச்சயமாக அறிவியலும், தொழில் நுட்பமும், நவீனம் சார்ந்த மனமாற்றமும், காலமும்தான் இந்த சமூக அவலத்திலிருந்து மக்களை விடுவிக்கும். ஆனால் வெங்கட்டே கணக்கு காட்டுவது போல, இராணுவத்திலும் அணு விண்வெளி ஆராய்சிகளில் இத்தனை முதலீடு செய்யும் அரசு, இந்த விஷயத்தில் மெத்தனமாய் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது? அதைத்தான் வில்சன் கேட்கிறார். இந்த அவலத்தை ஒழிப்பதில் லோக்கலிலிருந்து மைய அரசு வரை, சாதிய உளவியல் அடிப்படையில் சிந்தித்து பழகிவிட்டதன் பாதிப்பு இருப்பதை பற்றி பேசாமல், இந்த பிரச்சனையை அணுக முடியாது என்பது மட்டுமே நான் சொல்ல வருவது.

மற்றபடி இந்த அவலத்தை ஒழிக்க சாதியை ஒழித்தால்தான் முடியும் என்று நான் நினைக்கவில்லை. சாதியை ஒழிப்பது என்பது வேறு, அதை பற்றி விவாதிக்கும் போது இந்து மதம் பற்றி பேசாமலும், (ஒழித்து கட்டினால்தான் தீர்வு ஏற்படும் என்று இல்லை, ஆனால்) அதை கணக்கில் கொள்ளாமலும் இருக்க முடியாது. ஆனால் இந்த அவலம் பற்றி பேச, அது பற்றியெல்லாம் எதுவும் பேசவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தீர்வுகள் என்று நினைப்பவற்றை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்களை, முட்டுகட்டைகள் மெத்தனங்களை பற்றியும், அதன் பிண்ணணி பற்றியும் பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி வெங்கட்டின் மாற்றுவழிகளுக்கான வாதங்கள் எதையும் சிறிய அளவில் கூட திசை திருப்பும் அளவிற்கு எதையுமே இன்னும் நான் சொல்லவில்லை. நான் அவரின் அக்கறையை மதிக்கிறேன். பதிவில் விமர்சனமாக சொல்லப்பட்ட வேறு எந்த வரியும், அவரை நோக்கி சொல்லப் பட்டதல்ல. ஒரு விவாதத்தின் மிகவும் தொடக்கத்தில், ஒருவரி விமர்சனத்தை இப்படி எதிர்கொண்டால் விவாதத்தை தொடர்வதும், உவப்பில்லாத கருத்துக்களை சொல்வதும் சிக்கலாகும்.

ஜோசஃப் எழுதியதை முன்வைத்து நான் எழுதியதை, வெங்கட் ஒப்புகொண்டதற்கு நன்றி. வெங்கட் பதிவில் சில வரிகள், ஜோசஃபின் ஒப்புமையை ஒப்புகொண்டு பதிலெழுதியதாய் தோன்றியதால், மீண்டும் ஒரு வரியில் குறிப்பிட்டேன். வெங்கட் தெளிவு படுத்திய பின், என் வரியை திரும்ப பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. மன்னிக்கவும், நன்றி!

ஜெயஸ்ரீக்கு,

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் இனி பின்னூட்டமிட மாட்டேன் என்று, ஏதாவது புண்பட நேர்ந்து, முடிவெடுத்திருந்தால் வருத்தமாக இருக்கிறது. எனக்கு அப்படி நோக்கம் கிடையாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சில கருத்துக்களை யாரேனும் புண்படக் கூடும் என்பதர்காக சொல்லாமல் இருப்பதும் கடினம்.

ஜெய்ஸ்ரீ, தங்கமணியின் பதிவில் எழுதி பிரபலமான பின்னூட்டம் மீது, விமர்சனம் நிறைய இருந்தாலும், அது ஜெய்ஸ்ரீ தன் மனதில் உள்ளதை நேர்மையாய் முன்வைத்ததாகவே நினைக்கிறேன். (அந்த ஒரே காரணத்தால் மட்டும் அதை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்பது மட்டுமே நான், ஜோசஃப் பற்றி சொல்லும்போது, குறித்தது.) ஆனால் ஜெய்ஸ்ரீஎழுதியதை மற்றவர்கள் கொண்டாடிய விதம்தான் ஆபாசமாகவும், நேர்மை குறைவு கொண்டதாகவும் எனக்கு தோன்றியது. அந்த கொண்டாட்டத்தின் காரணமாகவே சிலருக்கு கோபம் வந்திருக்கலாம். எனினும் அது குறித்து இப்போது, இந்த பிரச்சனைக்கான சந்தர்ப்பத்தில் பேச அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

கீதா ராமசாமி புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையை என் மெயின் பதிவில் அளித்திருக்கிறேன். அதில் பல ஆண்டுகளுக்கு இந்த அவலம் குறித்த மிக அடிப்படையான கேள்விகளே தனக்கு எழவில்லை என்பதை மிக நேர்மையாய் ஒப்புக்கொண்டிருக்கிறார். துப்புரவு தொழிலாளர்களுடன் வேலை செய்து, அவர்கள் வாழ்க்கை பற்றி அருகிலிருந்து அறிந்த ஒருவருக்கே, சில கேள்விகளும் அதன் தீவிரமும் உறைக்க பல ஆண்டுகளும், சில சம்பவங்களும் சில தொடர்புகளும் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் யாரையும் நோக்கி விரல் உயர்த்துவது என் நோக்கமல்ல. வெகுளித்தனமும், சில மேம்ப்போக்கான வாதங்களையும் கவர்ச்சிகரமான மொழியில் முன்வைத்ததும், அதை தங்களுக்கு உவப்பானது என்ற ஒரே காரணத்திற்த்காக, இந்த அளவு glorify செய்து கொண்டாடும் ஆபாசம்தான் குமட்டுகிறது (பலமுறை சொல்லிவிட்டாலும், குமட்டினால் குமட்டுகிறது என்றுதானே சொல்லமுடியும்.)

மற்றபடி வேறு ஒரு விவாதத்தின் சந்தர்பத்தில் ஜெய்ஸ்ரீ எழுதியது பற்றி நான் பேசலாம். என் பதிவிற்கு பின்னூட்டமிடுவது அவர் விருப்பம் சார்ந்தது என்றாலும், அவருடய அக்கறைகளையும் நான் மதிக்கிறேன். எதையும் மனதில் வாங்காமல் நான் புறக்கணிக்க முயல்வதில்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

0 Comments:

Post a Comment

<< Home

Site Meter