கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Monday, April 03, 2006

இன்னும் எத்தனை காலம்தான்..!

சிங்களக் கடற்படை ராமேஸ்வரத்து மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில், எட்டு மீனவர்களை காணவில்லை என்று செய்தி வந்தது. அவர்கள் என்னவானார்கள், அது குறித்து அறிய முயற்சி, விசாரணை, கவலை கொள்வது என்று எங்காவது நடக்கிறதா என்று அதற்கடுத்த நாட்களில் வந்த செய்திதாள்களின் பக்கங்களிலிருந்து என்னால் அறிய முடியவில்லை. முன்பெல்லாம் சில காலம் முனகல்களுக்கு பின்னர் மறக்கப்பட்டது போல அல்லாமல், இந்த முறை சின்ன முனகல் கூட இல்லாமல் இந்த விஷயம் மறக்கடிக்கப்படும் என்று தோன்றுகிறது.

சிங்களப் படையின் தாக்குதலின் எதிரொலியாய் இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எப்படியெனில் விசாகப்பட்டினம் அருகில், இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துகொண்டிருந்த இலங்கையை சேர்ந்து ஒன்பது மீனவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கலாம் என்றாலும், இப்படிப் பட்ட நடவடிக்கைகளை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்கள் உள்ளூர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். சச்சிதானந்தன் மறவன்புலவு அவர்கள் சொல்வதை பார்த்தால், விசாரணை துரிதமாய் முடிந்து அவர்கள் இலங்கைக்கு உடனடையாய் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தெரிகிறது. (என்ன விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லை, குறிப்பாக தமிழர்களே இல்லை என்பதை விசாரணை மூலம் உறுதிப் படுத்திவிட்டு அனுப்பிவிடுவார்கள் போலும்.) இதில் எந்த வித ஆட்சேபணையும் யாருக்கும் இருக்க முடியாது. தமிழகத்து மீனவர்களை போலவே, பொருளாதார பின்புலமும் வாழ்க்கையும் கொண்ட அவர்கள், இந்தியப் படையின் துப்பாக்கிகளுக்கு இலக்காகவேண்டும் என்று யாருக்கும் ஆசையில்லை. எனக்கிருக்கும் கேள்விகள் சென்ற பதிவில் உள்ளவை மட்டுமே.

இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து- இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது? இந்த விஷயத்தில் இவ்வளவு சோப்ளாங்கியாய் இருக்கும் இந்திய கடற்படை, மற்ற விஷயங்களில் -புலிகள் கப்பல், ஈழதமிழ் அகதிகள் விஷயங்களில்- அத்தனை திறமையுடையதாகவும் கடுமையானதாகவும் இருக்கிறது? தான் என்ன ஆட்டம் ஆடினாலும் இந்தியா தன்னை எதுவும் செய்யாது என்று இலங்கைக்கு எப்படி இவ்வளவு தைரியம் வருகிறது? இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்? இதே தளத்தில் இன்னும் பல இயற்கையான கேள்விகளும் உள்ளன.

"இது வடவர்களின், இந்தியப் பார்ப்பனீய 'அரசாங்க இயந்திரத்தின்' ஆதிக்க மனோபாவத்தையும் தமிழைனத்தின் மீதான வெறுப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் கொள்ளத்தான் வேண்டும்" என்று நியோ சொல்வதை மறுக்க எந்த வாதமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஈழதமிழர்கள் என்றால் அவர்கள் வேறு நாட்டினர் என்று ஒரு சால்ஜாப்பையாவது சொல்லமுடியும். இந்திய தமிழன் கேள்வி கேட்பாரின்றி சுடப்படுவதை பற்றி எந்த அதிர்வலையும் இல்லையென்றால் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்!

இராம.கி அவர்களும் குறிப்பிடுவது போல், இந்த விஷயங்களை பேசுபவர்களை பற்றி முத்திரை குத்தியே இதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். மீண்டும் இது ஒரு தமிழ் தேசியவாதிகளுக்கும், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் மட்டுமான ஒரு பிரச்சனையாய் மற்றிவிடுவார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் நடந்த, மிக கொடூரமான செயல்களை பற்றி, பேசுபவர்கள் முத்திரை குத்தப் பட்டு, அது ஒரு சிலரின் பெரிதுபடுத்தல்களாகி விட்டது. மைசூரில் எந்த விசாரணயும் இன்றி காலகாலமாய், உரிய ஆதாரமின்றி அடைத்து வைக்கப்படிருந்தவர்களை பற்றி பேசவே இயலவில்லை. ஆனால் பல காலம் கூச்சல் எழுப்பியதால்தான் ஆமை வேகத்திலாவது ஒரு விசாரணையாவது நடந்து, பல அப்பாவி மக்கள் பின்னர் (காலம் கடந்தாகிலும்) விடுதலையாக முடிந்தது. அந்த காரணத்திற்காகவாவது நாம் இது போன்றவற்றில் சோர்வுறாமல் அவ்வப்போது குரலையாவது ஒலிக்க வேண்டும்.

சென்ற பதிவில் வந்த் பின்னூட்டங்களில் இராம. கி அவர்களின் பின்னூட்டத்தையும், மறவன்புலவு சச்சிதானதன் அவர்களின் பழைய பதிவு ஒன்றையும்(கட்டுரையை சுட்டிய நியோவிற்கு நன்றி), அவற்றின் முக்கியத்துவம் கருதி இங்கே பதிவு செய்கிறேன். யாருக்கும் இதில் ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன். இதுவரை 500 மீனவர்களாவது கொல்லப் பட்டிருப்பார்கள் என்ற என் கருதுகோளிற்கு மாறாக மறவன்புலவின் கட்டுரையில் இரண்டாயிரம் என்று கணக்கு சொல்லப்படுகிறது.



இராம.கி: இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. பேராயம் (congress), பாரதிய சனதா, இன்னும் அந்தக் கால சனதாவின் இந்தக் கால உதிரிக் கட்சிகள் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் எனப் பலவும் (பொதுவுடைமையர் சிலர் வறட்டு வாதம் பேசி இது பற்றி ஓடி வரலாம்.) ஏற்றுக் கொண்டதில்லை. தேசிய இனங்களை முன்னிறுத்தும் திராவிடக் கட்சிகள், அகாலி தளம், அசோம் கண பரிசத் போன்ற கட்சிகளும் ஒரு தெளிவில்லாமல், அதிகாரத்தில் பங்கு கிடைத்தவரை சரி என்றே இருந்து வருகிறார்கள். எல்லாமே வணிக அரசியல் என்று ஆகிவிட்டது. இந்தியா ஒரு தேசியக் குடியரசு (national republic) என்றே இன்றைய நடுவண் அரசு சொல்லிவருகிறது. இந்தியாவின் அதிகார வருக்கம் (bureaucracy) அரசியலாருக்கு அதைத்தான் பாடமாகச் சொல்லி வருகிறது. இவர்களும் அதை உண்மை என்றே நம்பி வருகிறார்கள்.

இந்தச் சிந்தனை மாறாத வரை தமிழ்நாட்டிற்குத் தெற்கே நடக்கும் சிக்கல்களை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாது. கால காலமாய் சிங்கள அரசிற்குச் சார்பாகவே இந்திய அரசு நடந்து வந்திருக்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் ஈழப் போராளிகள் தமிழ்நாட்டில் வந்து போர்ப் பயிற்சி பெற்றதும் பின் இங்கிருந்து மீண்டும் அங்கே விடுதலைப் போரில் போராடப் போன போதும் நடந்தது ஒரு புறனடையாகத் (exeception) தோன்றியது; அவ்வளவுதான். உண்மையில், இவர்கள் இந்திய அரசிற்குக் கூலிப் படையாக இருப்பார்கள் என்றே இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் தான் ஆதரவும் பயிற்சியும் கொடுத்தது. ஆனால் போராளிகள் தங்களுக்கென்று சொந்தச் சிந்தனை உண்டு என்ற வகையில் இந்தியத் தடந்தகை(strategy)க்கு உடன்படாமல் போனார்கள். பின்னால் நிலைமை மாறி இந்தியப் பெரும்படையே ஈழப் போராளிகளோடு போரிடும் நிலை ஏற்பட்டது.

இப்படி நடந்து சூடு கண்ட காரணத்தால், இந்திய அரசு, இன்றைய நிலையில் சிங்களப் பேரினவாதத்திற்குச் சார்பாகவே நிலையெடுக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதில் நாற்பது என்ன நாலாயிரம் இந்திய மீனவர்கள் இறந்தாலும் இந்திய அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளாது. இந்திய அரசின் தடந்தகை தன்னைச் சார்ந்தது; தன்னுடைய கடற்புறத்தில், அதாவது அரபிக் கடலில் குசராத் தொடங்கி, சுற்றிவந்து இந்துமாக் கடலும், பின் கிழக்கில் வங்கக் கடலில் வங்காளம் வரைக்கும் வல்லரசுகள் யாரும் வந்துவிடாவண்ணம் வல்லாண்மை காட்டுகிறது; அந்தத் தடந்தகையில் அருகில் உள்ள நாடுகள் யாரும் தன்னோடு முரண்பட்டு தனக்குப் பகைநிலை எடுத்துவிடக் கூடாது; அப்படி எடுத்தால் அதில் அமெரிக்காக்காரன் வந்து உட்கார்ந்து கொள்ளுவான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சிங்கள அரசின் கப்பற்படையோடு இந்தியக் கப்பற்படை சண்டைக்குப் போனால், சிங்கள அரசு உறுதியாக அமெரிக்கா, பாக்கிஸ்தான் என்று ஒரு வகை ஆழமான உறவில் போய்விடும் (இப்பொழுது அவர்களுக்கு இடையே இருப்பது ஒரு ஆழமில்லாத உறவே) என்ற ஒரே சிந்தனையில் தான் சிங்கள அரசை இந்திய அரசு எதிர்ப்பதும் இல்லை; ஈழம் மலர்வதை விழைவதும் இல்லை; கச்சத்தீவைப் பெறுவதும் இல்லை; தமிழ்நாட்டு மீனவர் அவ்வப்பொழுது சுடப்படுவதையும், படகுகளை வாரிக் கொண்டு போவதையும், அவ்வப்போது மீனவரைப் பிடித்து மன்னாருக்குக் கொண்டுபோய் அலைக்கழித்து ஆறுமாதம், ஓராண்டு கழித்து விடுவதையும் கண்டுகொள்ளவும் இல்லை.

பொதுவாக, இந்திய நாடு விடுதலையானதில் இருந்து நடந்துவரும் நிகழ்வுகளை தடந்தகைக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலை புலப்படும். கென்யாவில், உகாண்டாவில், சாம்பியாவில் குசராத்திகள் போன்றோர் அடிபட்டால் இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கும், பர்மாவில், மலேசியாவில், இலங்கையில் தமிழர் அடிபட்டால் இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்டதில்லை; சும்மா பேருக்கு ஏதேனும் செய்யும்; பின்னால் தன் வேலையை நிறுத்திக் கொண்டுவிடும். இவற்றை எல்லாம் எழுதப் போனால், சொல்பவனைக் குறுகல் புத்தி என்று சாடுபவர்கள் தான் மிகுந்து நிற்பார்கள். தமிழன் ஏமாளியானது பல்லாண்டு கால வரலாறு. இப்பொழுது நீங்கள் அந்தப் புலனத்தை மீண்டும் எடுக்கிறீர்கள்.

என் கோவமெல்லாம் நடுவண் அரசின் அரசியலாரிடமோ, அதிகார வருக்கத்திடமோ கிடையாது; நமக்கென்று வாய்த்திருக்கிறார்களே ஒரு சில தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தான். உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம் பேசி என்ன பலன்?

மீனவர்களுக்காக வருந்தத்தான் முடியும்.


சிங்கள மீனவருக்கு ஒரு நீதி, தமிழ் மீனவருக்கு ஒரு நீதியா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மனைவி முத்துலட்சுமியையும், கண்மணிகளான நான்கு குழந்தைகளையும் கையறு நிலையில் விட்டுவிட்டு, நாற்பது வயதான இராமு கடலில் உயிர்நீத்தார்.இராமுவின் உயிரைக் குடித்த இலங்கைக் கடற்படையின் துப்பாக்கி ரவைகள், கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்களின் உயிர்களையும் குடித்து வந்துள. அந்த நீண்ட பட்டியலில் இராமுவின் பெயர் இறுதியானதல்ல. இன்னமும் சில ஆயிரம் தமிழக மீனவர்களைப் பறவைகளைச் சுடுவது போல் கடற்பரப்பில் வைத்துச் சுட்டுக் கொல்ல இலங்கைக் கடற்படை அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.இராமுவுக்குக் கடலைத் தெரியும், மீன் வகைகளைத் தெரியும், படகுகளை ஓட்டத் தெரியும், நீச்சல் தெரியும், வலைகளின் கண் அளவுகள் தெரியும், மிதப்புக் கட்டைகளை வலைகளில் பொருத்தத் தெரியும்; எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த ஆழத்தில் எந்தவித வலையை எந்தக் கண்ணளவில் பயன்படுத்தினால் எவ்வெவ்வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற பட்டறிவும், தொழில் நுட்பமும் நன்றாகவே தெரியும்.பகலிலோ, இரவிலோ கடற்பரப்பில் திசையை இராமு அறிவார். தனக்கும் தன்துறைக்கும் இடையிட்ட தூரத்தையும் அறிவார். கண் புருவத்துக்கு மேல் கைவிரலை அடுக்கிக் கூர்ந்து பார்த்துத் தொலைவில் தெரியும் நிலத்தின் கரையோரத்தையும், கரையிலுள்ள கலங்கரை விளக்கங்களையும், கடற்பரப்பில் மிதக்கும் படகுக் கூட்டங்களையும் எளிதில் கண்டறிவார்.ஆனால் கடலின் நடுவே இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கின்ற கற்பனைக் கோட்டை அவரால் கண்டுபிடிக்க முடியாது. அவர் மட்டுமல்ல, பாக்குநீரினையின் எதிரெதிர் கரைகளில் வாழும் அவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மீனவர் எவராலும் துல்லியமான இந்திய இலங்கை எல்லைக் கோட்டைக் கணிக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாது.இந்தக் கற்பனைக்கோட்டுக்குரிய வரைபடங்கள் இந்தியஇலங்கை நிலஅளவையாரிடம் இருக்கின்றன. வேறு எந்த வழிகாட்டியும் எவரிடமும் இல்லை!தனுஷ்கோடி தொடக்கம் நாகப்பட்டினம் வரை இருநூற்றைம்பது கிமீ. நீண்ட தமிழகத்தின் கரையோரமெங்கும் பல இலட்சக்கணக்கான மீனவர்கள், நூற்றுக்கும் அதிகமான ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் ஊர்களில் உள்ள எவருக்குமே இப்படியான ஒரு கற்பனைக்கோடு உள்ளதென்பதையோ, ஊர்க்கரையில் இருந்து இவ்வளவு தொலைவில் அக்கோடு உள்ளதென்பதையோ, இக்கோட்டுக்கு அப்பால் இலங்கைக் கடல்பகுதி என்பதையோ விளக்கி விவரிக்கும் வரைபடங்களோ, துண்டு வெளியீடுகளோ, சுவரொட்டிகளோ, நிலையான பட அமைப்புகளோ, அறிவிப்புகளோ தரப்படவில்லை.விடுதலை பெற்ற காலத்தில் நூற்றுக்கு பதினைந்து பேர் எழுத்தறிவு பெற்ற நிலைமாறி, இந்தக் கடலோரச் சிற்×ர்களில் நூற்றுக்கு எழுபத்தைந்து அல்லது எண்பது பேர் எழுத்தறிவு பெற்றவராக மாறியுள்ளனர். எல்லைக் கோடு பற்றிய தகவலைச் சொன்னால், அதுவும் உரிய படங்களைக் காட்டிச் சொன்னால் புரிந்து, அறிந்து கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள்.இலங்கைக் கடற்படை சுட்டதால் ஒவ்வொரு ஊரிலும் ஆகக் குறைந்தது இருவராவது பலியாகி இருப்பார். இவர்கள் எவருக்குமே எந்தக் காலத்திலும் பாக்கு நீரிணையில் உள்ள இந்திய இலங்கைக் கடல்எல்லைப் பற்றிய அறிவை யாரும் ஊட்டவில்லை.பாக்குநீரிணையின் கிழக்குக் கரையோரத்தில் பரந்து வாழ்ந்த மீனவர் சமுதாயம், இலங்கை அரசின் கொடுமையான நடவடிக்கைகளால் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக அவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையைத்தானும் இலங்கைக் கடற்படை வழங்க மறுத்து வருகிறது. பலர் தொழிலையே விட்டுவிட்டார்கள். சிலர் தமிழகக் கரைகளுக்கு வந்து தமிழக மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாக்குநீரிணைக்குத் தெற்கே மன்னார்க் குடாவின் தென்கிழக்குக் கோடியில் இலங்கைக் கரையோரமெங்கும் சிங்கள மீனவர்கள் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். எவ்விதத் தடையுமின்றி மீன் பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தும் மீன் பிடிக்கிறார்கள்.கடந்த ஜூன் இரண்டாம் தேதி புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு, கொழும்புக்கு வடக்கே நீர்கொழும்பிலிருந்தும், மாவனல்லையிலிருந்தும் மூன்று படகுகளில் மீன் பிடிக்கப் புறப்பட்ட பதினைந்து மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அவர்களை இரவு எட்டுமணியளவில் இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்தது. மூன்று படகுகளையும் கட்டி இழுத்துக் கொண்டு இராமேஸ்வரம் நோக்கி வந்தது.இதைக் கண்ட ஏனைய சிங்களவரின் மீனவப் படகுகள் நீர்கொழும்புக்கு விரைந்தன.மூன்று படகுகள் கைதான செய்தியை இலங்கைப் பிரதமர் மகிந்தா இராஜபக்சாவிடம் தெரிவித்தனர். உடனே அவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் நிருபம்சென்னிடம் பேசினார். இந்தியத் தூதர் செய்தியைத் தில்லிக்கு எடுத்துக் கூற, தமிழகக் காவல்துறைத் தலைவர் மூலம் அந்த மூன்று படகுகளையும், பதினைந்து மீனவர்களையும் இராமேஸ்வரம் கரைக்குக் கொண்டு வராமலே திருப்பி அனுப்புமாறு தில்லி ஆணையிட்டது. கைதானோர் யாவரையும் கடலில் வைத்தே படகுகளுடன் இரவு பத்தரை மணிக்கு விடுவித்தனராம்!சிங்கள மீனவர் தற்செயலாகவோ, காலநிலை காரணமாகவோ, தென் கடலாகிய மன்னார்க் குடாவின் இந்தியக் கடல் எல்லைக்குள் வரலாம், கைதாகலாம், உடனே விடுவிக்கப்படலாம். இலங்கை அரசு துரித நடவடிக்கை எடுக்கும், தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கை சிங்கள மீனவருக்கு உண்டு.தங்கள் உயிரைக் குடிக்கும் துப்பாக்கி ரவைகள் இந்திய கடலோரக் காவற்படையிடம் இல்லை என்ற நம்பிக்கையும் சிங்கள் மீனவருக்கு உண்டு. ஏனெனில் இந்தியக் கடலோரக் காவற் படை சுட்டு எந்த ஒரு மீனவரும் இன்னும் இறக்கவில்லை!ஆனால் வடகடலான பாக்கு நீரிணையில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது. தடையை மீறிப் போனால் சுடப்படுவர். அவர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலிருந்து மீன் பிடிக்க வரும் கப்பல்களையும், படகுகளையும் இலங்கைக் கடற்படை விரட்டும், வலைகளைக் கைப்பற்றும், மீனவர் பிடித்த மீனை அள்ளிக் கொண்டு போகும், படகுக்குச் சேதம் விளைவிக்கும், மீனவர்களுக்குக் காயம் விளைவிக்கும், அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோய் இலங்கைக் கொடுஞ்சிறைகளில் அடைக்கும் அல்லது பறவைகளைச் சுடுவது போல் அத்தமிழ் மீனவரைச் சுட்டுக் கொல்லும். கேட்பதற்கு யாருமில்லை!கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியக் கடலோரக் காவற்படை இலங்கைத் தமிழருக்குச் சேர்ந்த ஐநூற்றுக்கும் அதிகமான வள்ளங்களையும், படகுகளையும் கைப்பற்றிக் கடலோரமெங்கும் வைத்திருக்கிறது. அவற்றுள் பல சிதிலமாகி, நைந்து, அழியும் நிலையில் உள்ளன. இவற்றை மீட்டு இலங்கைத் தமிழ் மீனவரிடம் கொடுப்பதற்கு இலங்கை அரசின் முயற்சிகள் கண்துடைப்பாகவே உள.இராமு இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசும், அரசியல் தலைவர்களும் தில்லிக்கு இந்த அநீதிகளை எடுத்துச் சொல்லிக் கடிதங்கள் அனுப்பியும் நேரில் கூறியும் வருகின்றனர்.தில்லியின் கருத்தை இலங்கை மதிப்பதில்லை.ஆனால் சிங்கள மீனவரைக் காக்க இலங்கை அரசின் வேண்டுகோளை இந்திய அரசு உடனே நிறைவேற்றுகிறது.கடந்த இருபது ஆண்டுகளாகப் பாக்குநீரிணையின் கடல்வளத்தை முழுமையாகத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்த விடாத இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் கட்டுக்கடங்காமலுள்ளது. இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகிறது; இந்தியக் கடற்கரை ஓரங்களில் வைத்துத் தமிழக மீனவர்களைச் சுடுகிறது; தனுஷ்கோடித் தீவில் உள்ள சிற்×ர்க் குடிசைகளை ஒருமுறை தீயிட்டுக் கொளுத்துகிறது; பாக்கு நீரிணை முழுவதிற்கும் நாட்டாண்மையாளராகியுள்ளது.கடலட்டை, சங்கு, இறால், சிங்கறால், கெளுத்தி, திருக்கை, பாரை, சாலை, வஞ்சிரம், நெத்தலி, சுறா, கணவாய் என பல்கிப் பெருகும் கடல் உயிரின வளங்களைப் பிடிப்பதையே வாழ்வாகக் கொண்டு இலட்சக்கணக்காகச் செறிந்து, பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழ்கின்ற தமிழ் மீனவர்களின் எதிர்காலம் இலங்கைக் கடற்படையின் கட்டுக்கடங்கா அட்டூழியத்தினால் கேள்விக்குறியாகி வருகிறது.

5 Comments:

Blogger ROSAVASANTH said...

விவாதத்தை முன்வைத்து இராம.கி அவர்களின் பின்னூட்டத்தை இட்டிருக்கிறேன். "உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம்... " என்று அவர் சொல்வதை நான் ஏற்கவில்லை. தமிழ் குமுகாயத்தின் உள்முரண்பாடுகளை தக்கவைத்து கொண்டே, அவற்றை முழுமையாய் தீர்காமலும் கூட இந்த பிரச்சனைகளை பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.

3:25 AM  
Blogger ஈழபாரதி said...

தமிழர்கள்தான், இந்தியா, தேசியம், ஒற்றுமையில் வேற்றுமை என்று வீரம் பேசுகிறார்கள், தமிழ்நாட்டை தாண்டி அங்கால் போனால் தெரியும் தமிழர்களின் மரியாதை, இலங்கையிலும் அப்படித்தான் இப்பதான் கொஞ்சம் பயப்படதொடங்கி இருக்கிறர்கள். இந்திய ராணுவம் எமக்கு அடித்தபோது மூர்க்கமாக இருந்தவர்களில் பாஞ்சாப்ராணுவத்தினர் கூடிய மூர்க்கம் காட்டியது, ஏன் என வினவியபோது ஒரு ராணுவ வீரன் எனக்கு அடிப்பதுக்குமுன்னர் கூறியது, பஞ்சாப் பொற்கோயிலுக்குள் பூட்ஸ் காலுடன் புகுந்தவர்கள், தமிழ் நாட்டு றெயிமெண்டாம், எங்க போய் என்னத்தை சொல்ல, பிற இனத்தவன் அடிக்கும்போது எம்மை தமிழனாகத்தான் பாக்கிறான், அதே மனோபாவம்தான் இலங்கை ராணூவத்துக்கும். அவர்கள் எம்மை எல்லாம் தமிழர்கள் என்றுதான் பார்க்கிறார்கள், நாம்தான் தமிழ்நாட்டான்,ஈழத்தவன்,மலைநாட்டான்,மலேசியத்தமிழன்,சிங்கப்பூர்தமிழன் என்று வேற்றுமை காட்டுகிறோம். பாரதத்தை தன் தாய்நாடக மதிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இந்தநிலை என்றால், தனது அரசை எதிரியாக பார்க்கும் இலங்கை தமிழ் மீனவர்களின் நிலை? என்றுதான் தமிழால் நாம் ஒன்றுபடபோகிறோம், தம் தம் தேசத்தை நேசிப்பது தவறு இல்லை, ஆனால் உண்மைகளை உராய்ந்துபார்க்கவேண்டும், தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும்,இனவொற்றுமையை மேம்படுத்தவேண்டும். தமிழால் தமிழ் இனம் உய்யவேண்டும்.

3:34 AM  
Blogger -/பெயரிலி. said...

Vasanth,
is it possible for you to post Tamil fishermen related news to his yahoo group, whenever/whereever you see (and if you can spare a min.).
TFPS · Archiving the happenings to the Tamil Fishermen_in _Palk_ Strait
TFPS at yahoogroups.com
Thanks.

5:04 AM  
Blogger ROSAVASANTH said...

peyarili, thanks for introducing this yahoo group. I have come to know onlythrough your comment. Eventhough I do not read news elloborately, I will post whatever I get to know. Thanks!

11:27 PM  
Blogger Vanthiyathevan said...

Rosa,

My first reply:

http://vanthiyathevan.blogspot.com/2006/04/1.html

4:42 AM  

Post a Comment

<< Home

Site Meter