கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Wednesday, April 05, 2006

எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!

வந்தியத்தேவன் எனக்கு எழுதிய எதிர்வினைக்கான முடிந்தவரையிலான இப்போதய மறுமொழி இது. அதற்குள் இரண்டாவது பதிவு எழுதியுள்ளார். இவ்வளவு வேகமாய் என்னால் செயல்பட முடியவில்லை. அதை இனிதான் நிதானமாய் படிக்க வேண்டும்.

மீனவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் (அல்லது இந்நாள் வரை தொடர்ந்து வரும் தாக்குதல்களால்) உந்தப் பெற்று, வந்திய தேவன் பதிவு எழுத வரவில்லை என்பது, வந்தியத்தேவன் உட்பட அவர் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும் வகையிலே, அவரது பதிவே எழுதப்பட்டுள்ளது. அவர் பதிலளிக்கும் விதத்திலிருந்தே தெளிவாக, இந்திய கடற்படை மற்றும் இந்திய தேசியம் பற்றி காட்டமாய் நான் எழுதியதற்கும், 'இந்திய குடிமகன்களை காக்க ஏன் இத்தனை பெரிய படைக்கு வக்கு இல்லை? கண்டதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் ஏன் இந்த பிரச்சனை குறித்து மௌனமாய் இருக்கிறார்கள்?' என்கிற விதத்தில் சில கேள்விகளை, தடித்த உடைகளை தாண்டி சிலருக்கு உள்ளே கொஞ்சம் உறைக்கும் வண்ணம், கேட்டதற்கு பதிலாகவே அவருடைய பதில் வந்துள்ளது.

மீண்டும் சொல்வதானால் என் பதிவிற்கு எதிர்வினை என்ற வகையிலாவது, வேறு எதனனலேயோ உந்தப்பட்டு, 'மீனவர் பிரச்சனைகள்' குறித்து பல பதிவுகளில் வந்தியத்தேவனுக்கு எழுதும் கட்டாயம் நேர்ந்ததும் நல்ல அறிகுறிதான். அடுத்து, முன்பொருமுறை வந்தியதேவனை ஒரு வசைவார்த்தையால் திட்டியதை, இந்த பிரச்சனையுடன் இணைத்து, தொடர்பில்லாத விஷயங்களை தொடர்பு படுத்திப் பேசும் ஒரு அசிங்கமான உத்தியில் அவர் ஈடுபாடாததை இங்கே குறிப்பிட்டு, அவரது ஆரோக்கியமான விவாத மனப்பான்மைக்கான ஒரு அடையாளமாக அதை எடுத்து கொண்டு, மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். பின்வரும் அனைத்தும் அவர் எழுதியதை முன்வைத்த மறுமொழிகள் மட்டுமே. மேற்கோள் குறிகளுக்கு இடையில், இதாலிக்கில் அவர் எழுதியதை தருகிறேன்.

முதலில் அவர் பங்களாதேஷ் விவகாரம் பற்றிய முன்னுரையுடன் தொடங்குவது பற்றி இப்போதைக்கு சொல்ல எதுவும் இல்லை. பின்னர் அவர் எழுதுவதாக உள்ள பதிவுகளில், இந்திய மீனவர்கள் பிரச்சனையையும் கச்சத் தீவைவையும், பங்களாதேஷ் பிரச்சனையையும், ஒப்பிட்டு கலந்தடித்து, சில சால்ஜாப்புகளை சொல்வது, அவர் நோக்கம் என்பதாக நான் நினைக்கிறேன். அப்படி நேர்ந்தால், அந்த சந்தர்ப்பத்தில் அதை பற்றி பேசவேண்டிய தேவை நேரலாம். மற்றபடி இப்போதைக்கு இது பேசப்படும் பிரச்சனையுடன் தொடர்பில்லாதது.

டெகான் கொரோனிகிளில் செய்தியை காலையில் படித்துவிட்டு, பதிவிற்கு சுட்டி தரும் நோக்கத்தில், இந்து பத்திரிகையில் தேடி பார்த்து, சுட்டி கிடைக்காததை பற்றி எழுதியிருந்தேன். என்னளவில் தேடிப்பார்த்து, என் கண்களில் படாததையும், ஒருவேளை மீறி வந்திருந்தால் மன்னிக்கவேண்டும் என்று சொல்லி, அவரவர் மனதிற்கு பட்டதை தங்கள் அரசியல் அகராதிப்படி கற்பித்துகொள்ளக் கேட்டுகொண்டு விட்டு, இந்து செய்தி வெளியிடாததற்கு எந்த உள்நோக்கத்தையும் கற்பிக்காமலேயே தொடர்ந்திருந்தேன். "ஹிந்து பத்திரிக்கையை பினாயில் ஊற்றி தேடிப்படிக்கும் ரோஸாவசந்திற்கான' செய்தியாய் வந்தியத்தேவன் தேடி தருவது என்னவெனில், (நான் ஏற்கனவே படித்திருந்த) 2003இல் ஃப்ரண்ட்லைனில் வந்த ஒரு கட்டுரை. வந்தியத்தேவனின் அறிவை கண்டு அதிசயிக்கத்தான் வேண்டும். அவர் இணையத்தில் தேடி அளித்த இந்த பதிலுக்காக அல்ல. எதை நோக்கமாக வைத்து ஃப்ரண்ட்லைன் கட்டுரை எழுதிபட்டதோ, அதே கரணத்திற்காக அவரும் தேடி, சரியாய் மூன்று வருடத்திற்கு முந்தய ஃப்ரண்ட் லைன் கட்டுரையை எடுத்துப் போடும் அறிவுக் கூர்மைக்குத்தான்.

ஹிந்துவின் கணக்குப் படியே, 20 ஆண்டுகளில், 112 மீனவர்கள் இலங்கைப் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது குறித்து கட்டுரை எதையும் எழுதாத , போனவாரம் நடந்த தாக்குதல் பற்றி சின்னதாய் செய்தி தரக் கூட துப்பில்லாத ஃப்ரண்டலைன் இந்து கும்பலுக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குதலிட்டதும், அந்த மோதலை வைத்து கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்னவென்று, இந்துவில் வரும் செய்திகளின் பிண்ணணி அறிந்த, எந்த சுய நினைவுடைய வாசகனுக்கும் புரியும். அதுவே வந்தியத்தேவனையும் ரொம்ப சாமர்த்தியமாய் எழுத வைக்கிறது. 3 + 5, மார்ச், 2003, செய்திகளை எடுத்துப் போடுகிறார்.

"மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?"

இதில் என்ன எழவு நியாயம் வேண்டியிருக்கிறது? தூத்துக்குடியில் இரண்டு பகுதிகளில் உள்ள மீனவர்கள் கூட, தங்களுக்கு, தொழில்ரீதியாய் பங்கம் வந்தால், வெட்டுக் குத்து சண்டையில் ஈடுபடுவார்கள். முந்தய வரியில் ' மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்து அகதிகள்' என்றும் அடுத்த வரியில் 'முன்னாள் ரத்தபந்தங்கள்' என்றும் எழுதி, இவர்கள் 'தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?' என்று கேட்பதன் பின்னுள்ள தர்க்கம் என்ன? தொழில்ரீதியாய் தாங்கள் பாதிக்கப் படுவதை முன்வைத்து, தங்கள் நலன் சார்ந்து, இரு குழுவினர்கள் போடும் சண்டையை, ஒரு ஆதாரமாய் காட்டி, நிராதரவான மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குவதையும், அது குறித்து எதுவும் செய்ய வக்கில்லாமல் இந்தியாவும் அதன் கடற்படையும் இருப்பதையும் நியாயபடுத்த, இந்த ஒரு செய்தியை வந்தியத்தேவனுக்கு எடுத்துப் போடவேண்டியிருக்கிறது.

நான் எழுதியது போன வாரம் நடந்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் ஒரு பதிவு. மீனவர்களின் எல்லா பிரச்சனைகள் பற்றி ஆராய்வதும், விவாதிப்பதும் அதன் அப்போதய நோக்கம் இல்லை. வந்தியத்தேவன் ரொம்ப அறிவுபூர்வமாய் அணுகுவது போன்ற பாவனை செய்து, நான் 'சொல்வது போல்' இது வெறும் இலங்கை ராணுவம் மட்டுமே இந்திய மீனவர்களைக் தாக்கும்' பிரச்சனை அல்லவென்றும், ஈழதமிழர்களும் தாக்குகிறார்கள் என்று முடிச்சு போடுகிறார். அது சரி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டது போல், எத்தனை முறை ஈழத்தமிழ்ர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்குள் என்ன மோதல் இருந்தது/இருக்கிறது என்பதை இந்த 2003, மார்ச் நிகழ்வை தவிர வேறு எதையாவது ஆதாரம் காட்டமுடியுமா? பல காலத்திற்கு ஈழத்தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க, சிங்கள் அரசின் தடை இருந்ததால், அந்த தடை நீங்கி அவ்ர்கள் மீன் பிடிக்க தொடங்கியபோது, அந்த இடத்தில் தமிழக மீனவர்களும் மீன் பிடிக்கப் போனால் போட்டியாகத்தான் நினைப்பார்கள். இதில் என்ன மனித இயற்கைக்கு, அதன் நியாயத்திற்கு முரணாக நடக்கிறது. ஏற்கனவே சொன்னது போல் உள்ளுரில் இரண்டு குழுக்களிடையே போட்டி ஏற்பட்டாலும், இப்படிபட்ட சண்டைகளில் முடியவே வாய்ப்புக்கள் அதிகம்.

ஆனால் வந்தியத்தேவனுக்கு 'இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியுமாம்'. எப்படி அய்யா கற்பிதம் செய்கிறார்? அது என்ன நோக்கம், அதற்கு என்ன நியாயம்? எழுதி தொலைத்திருக்க வேண்டியதுதானே!

இவர் ஈழத்து மீனவர்களை முன்வைத்து தர்கிப்பது போல், இது என்ன தமிழகத்து மீனவர்களுக்கும், இலங்கையின் தமிழ்/சிங்கள் மீனவர்களின் தொழில் போட்டியினால் ஏற்படும் தாக்குதலா? இவ்வாறு சிங்களப் படை தமிழ் மீனவர்களை தாக்குவதை, ஒரு பொருளாதார பிரச்சனையாய், தொழிற் போட்டியாய் பிரச்சனையை திரித்து, சிங்களப் படையின் தாக்குதலையும், இந்தியாவின் உயிர் பறிக்கும் மௌனத்தையும் எடுத்த எடுப்பிலேயே திசை திருப்புவதிலேயே இவரின் யோக்கியதை தெரிந்துவிடுகிறது.

இவ்வாறு ஃப்ரண்ட்லைன் 2003 கட்டுரையை எடுத்துப் போட்டு, புத்திசாலித்தனமாய் பேசியவர், அடுத்த பத்திகளில் முட்டாளாகிறார். வலிந்து தன் தரப்பை நிறுவ, கையில் கிடைக்கும் எல்லா தர்க்க அஸ்திரங்களையும் பயன்படுத்த நேரும் போது, இப்படி முட்டாளாவது இயல்பானதுதான்.

"கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை தன் "உறுப்பை" நுழைத்தாலும், ரோஸாவசந்த் கூறுவது போல "தன்னிச்சையாய்" குறியை அறுக்க முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான "உத்தரவின்றி" இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகளா என்று ரோஸா கேட்பது நல்ல நகைச்சுவை. அங்கதம்/நகைச்சுவை' பிரிவில் அவர் தனது பதிவை தேன்கூடில் பதிவு செய்து கொள்ளலாம்."

'நான் சொல்வது எல்லாம் உண்மை' என்று தொடங்கி சாட்சி சொல்லிவிட்ட ஒரே காரணத்தினால் எந்த சாட்சியும் உண்மையாகிவிடாது என்பது போல், 'நல்ல ஜோக்' என்று வந்தியத்தேவன் சும்மா சொன்னதனால் மட்டும் எதுவும் நகைப்பிற்குரியதாகிவிடாது. வந்தியதேவனிடம் குறைந்த பட்ச சுய நினைவு இருந்தால், தான் அடுத்த பத்தியில், எனக்கு பதிலாக எழுதியிருப்பதை , மனதில் வைத்துக் கொண்டாவது அறிவுபூர்வமாய் எழுத முயற்சித்திருப்பார். அகதிகளாய், நிர்கதியாய் வரும் ஈழத்தமிழர்களை, நடுக்கடல் மணல் திட்டில் தவிக்க விடுவதற்கு மட்டும், அது குறித்து ஸ்டேட்மெண்ட் விட மட்டும் கமாண்டருக்கு எங்கேயிருந்து ஆணை வருகிறது? புலிகளின் கப்பல் ஆயுதம் சுமந்து போனால் மட்டும், எப்படி துரிதமாய் செயல்பட்டு தாக்குதலிட்டு அழிக்கவோ, சுற்றி வளைத்து கைது செய்யவோ முடிகிறது? பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, அதன் குடிமகன்கள் மீது தாக்குதல் நடத்தினால், (கிடைக்க நாட்கணக்கில் ஆகும் அல்லது கிடைக்கவே கிடைக்காத)தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அரசின் அனுமதி பெற்று, அவர்கள் தாக்கிவிட்டு, தங்கள் எல்லைக்குள் திரும்பிவிட அனுமதித்து கொண்டிருக்குமா? இந்த ஜனநாயகக் கடமை கடலுக்கு மட்டும்தானா, விண்வெளிக்குமா? என்ன கேனத்தனமான உளரல்? சால்ஜாப்பு சொல்லவும் ஒரு விவஸ்த்தை வேண்டாமா? ஒரு அந்நிய நாட்டுப்படை தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தி விட்டு செல்கிறது, இதற்கு முன்பும் பலமுறை செய்திருக்கிறது. ஒருமுறை கடற்கரை வீடுகளில் குண்டு பதிக்குமளவிற்கு அத்துமீறுகிறது. மைய அரசின் 'வெளிப்படையான அனுமதி' பெற்றுத்தான் இந்திய கடற்படை செயல்படுமாம். பாகிஸ்தான் எல்லையிலும் இப்படித்தான் நடக்கிறது.

அந்த லோக்கல் கமாண்டருக்கு முடிவெடுக்க அதிகாரம் இருக்கிறது, இல்லாமல் போகிறது, அது குறித்து யாருக்கு என்ன கவலை? அந்நிய நாட்டுப்படை உறுப்பை நுழைத்தது பற்றி மைய அரசு என்ன அலட்டிக் கொண்டது என்பதுதான் கேள்வி. உறுப்பை நுழைத்து, காரியமாற்றிவிட்டு திரும்பிய பிறகும் என்ன அலட்டிக் கொண்டது? அது குறித்து என்ன கண்டனம் தெரிவித்தது? எதிர்வினையாய் என்ன எதிர்கால நடவடிக்கை எடுக்கப் பட்டது? என்பதெல்லாம்தாம் நான் எழுதியதன் உள்ளிருக்கும் கேள்வி. எல்லாவற்றிற்கும் சும்மா 'அங்கதம்/நகைச்சுவை பிரிவில் பதிவு செஞ்சுக்கோ!' என்று சொல்லிவிட்டு, கேனதனமாய் பதில் எழுதினால் ஆச்சா?

அடுத்து 'முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்?' என்று தொடங்கி நான் கேட்டதற்கான அவரின் பதிலுக்கு வருவோம்.

"GPS (Global Positioning Syatem) இல்லாமலேயே ஆதிக்காலத்திலிருந்து கடற்வலம் வந்தவன் தமிழன். "அறியாமல்" அடுத்தவரின் கடலெல்லைக்குள் நுழைந்த சாதாரணப் படகுகள் என்று சால்ஜாப்பு வேண்டாம். நுழைந்தது சாதாரணப் படகுகள் கிடையாது. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்."

கேள்விக்கும் பதிலுக்குமான உறவை உன்னிப்பாக கவனிக்காவிட்டால், வாசிப்பை எங்கே வேண்டுமானலும் கடத்த கூடியவர்கள், இந்த வந்தியத்தேவனை போன்றவர்கள். அவர் தேர்ந்தெடுத்த வரியையும் சேர்த்து நான் எழுதியுள்ளது கீழே.

//இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்? தவறி போனவர்களை (அல்லது இந்தி(ரா)யாவால் தாரை வார்க்கப் பட்ட, இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று போனவர்களை) கைது செய்வது, நடைமுறையாக இருக்கலாம். தாக்குதல் நடத்தவும், சுட்டு கொல்லவும், அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இதையே வழமையாய் செய்வதையும், இந்தியா அனுமதிப்பதும்......//

ஒரு நேர்மறையான வாசிப்பை நிகழ்தும் யாருக்கும் நான் எழுதியதன் அடிப்படை கேள்விகள் புரியாமல் இருக்காது. 'இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று' (தெரிந்தோ, வேண்டுமென்றே திட்டமிட்டோ) போயிருந்தாலும் கூட, கைது செய்வது நடைமுறையாக இருக்கலாம். சுட்டு கொல்வதும், அதை தொடர்ந்து 20 வருடமாய் செய்து வருவதையும், அதை இந்தியா என்ற பெரியண்ணன் அனுமதிப்பதும் என்ன நியாயம் என்பதுதான் பின்னிருக்கும் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல், ஒரு வரியை எடுத்து ஒட்டி, அவர்கள் போனது சாதாரணப் படகு அல்ல, Trawlers என்று ஏதோ விவரபூர்வமாய் பேசுவதன் அறிவுநேர்மையை மெச்சத்தான் வேண்டும்.

இங்கே இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். இரண்டாவதற்கு பிறகு வருவோம். முதலாவது வந்தியத்தேவன் 'தர்க்கம் செய்வது' என்ற அளவில் எடுக்கும் சார்பு நிலை மற்றும் அதன் மூலம் அவர் நியாயப் படுத்தும் தரப்பு. இரண்டையும் அவர் இலங்கை கடற்படையின் தரப்பு சார்ந்து எழுதியுள்ளதுதான் மேலே உள்ள வரிகள். அதாவது இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதலிட முகாந்திரமாய் இருக்கும் வாதங்கள். நாம் எந்த தரப்பின் பக்கம் முன்னமே தீர்மனித்துவிட்டு பேசத் தொடங்குகிறோமோ, அதனடிப்படியில்தான் வாதங்கள் வந்து விழும். அதற்கேற்ப அடுத்தவர் எழுதியதை திரிப்பதும், தேர்ந்தெடுத்து வெட்டி ஒட்டுவதும் நிகழும். இடையில் பரிசீலனை செய்ய, கொஞ்சம் திறந்த மனதாவது வேண்டும்.

எனக்கு ராமேஸ்ரத்து மீனவர்கள் எந்த வகை படகில் சென்றார்கள் என்றும், trawlers படகுகளில் சென்றால் எல்லலயை பிரித்து அறியமுடியுமா என்பதும் தெரியாதுதான். செய்திகளின் அடிப்படையிலேயே பேசுகிறேன். இதற்கு முன் படித்த கட்டுரைகளில், செய்திகளில் கடலில் கடற்பரப்பை பிரித்து அறிவது கடினம் என்று படித்ததில்தான் எழுதினேன். மீனவர்கள் பலமுறை செய்திகளில், அப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பாதிக்கப் பட்ட அவர்கள் சொல்வது பொய், சிங்கள கடற்படையின் செயலுக்கும், இந்தியாவின் மௌனத்திற்கும் வக்காலத்து வாங்கும், வந்தியத்தேவன் சொல்வது மட்டும் உண்மை என்று எடுத்துகொள்வது ரொம்ப அதிகபட்சமாக எனக்கு இருக்கும். ஆனாலும் வேண்டுமென்றேதான் - சிங்களப் படையினாரால் தாங்கள் கொல்லப் பட கூடிய அபாயம் இருந்தும்- இலங்கை கடற்பரப்பிற்கு தமிழகத்து மீனவர்கள் சென்றார்கள் என்று, வந்தியத்தேவன் ஆதாரம் காட்டினால் ஒப்புகொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால் மேலே சொன்னது போல் நான் எழுப்பிய பிரச்சனை அதுவல்ல.

மேலும் வந்தியத்தேவன் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார் அல்லது என்ன பேசுகிறார் என்று எனக்கு சரியாய் புரியவில்லைதான். அவர் ஆதாரம் காட்டும் ஃப்ரண்ட் லைன் 2003 கட்டுரையில், ஈழத்து மீனவர்களிடன் தகறாறு வலித்தவர்கள் Trawler படகில் சென்றதாய் குறிப்பிடப் படுகிறது. எல்லா முறையும் , இன்றுவரை, *குறிப்பாய் கடந்த வாரம்*, இருக்கும் அத்தனை மீனவர்களும் இப்படி நவீனப் படகுகளில்தான் -அதுவும் ட்சுனாமி பேரழிவிற்கு பிறகு- செல்கிறார்களா? கடந்த வாரம் அவர்கள் 300 (எண்ணிக்கை பத்திரிகைகளில்) Trawlers படகுகளில்தான் சென்றார்கள் என்று எதன் மூலம் வந்தியா முடிவெடுக்கிறார் என்று தெரியவில்லை. நான் படித்த செய்தியில் அப்படி எதுவும் இல்லை. தூத்துக்குடி என்ற மீனவ நகரில் இருந்த அனுபவத்தில், மீன் பிடி தொழிலில் பலதரப்பட்ட வர்க்கங்கள் இருப்பதை உணர முடிந்திருக்கிறது. கோடி கோடியாய் சம்பாதிப்பவ்ர்களும், அடுத்த நாள் (சாதாரண)வள்ளத்தில் சென்றாலே நாளை கடத்த முடியும் என்ற நிலையிலும், எல்லா தரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே வகை நவீன படகுகளில் போய் மீன் கொள்ளை அடிப்பதாக, வந்தியத்தேவன் சொல்வதை, குறைந்த பட்சம் அவரது தர்க்க யோக்கியதையை கணக்கில் கொண்டாவது என்னால் அப்படியே ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஆனால் வந்தியதேவன் முன்வைக்கும் வாதத்தின் அயோக்கியத்தனம் என்னவெனில், அது இதுவரை இலங்கை படையினரால் சுடப்பட்ட அத்தனை மீனவர்களும், இலங்கை கடற்பரப்பில் போய் கொள்ளையடித்தார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களுக்கு நேர்ந்ததை நியாயப்படுத்தும் தர்க்கத்தை முன்வைப்பது. ஆனால் பலமுறை இந்திய எல்லையிலேயே தாக்குதல் நடந்துள்ளது என்றே ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை இந்திய எல்லைக்குள் புகுந்து, கடற்கரை வரை துரத்தியதற்கும் அவரிடம், நமது கடற்படையின் ஜனநாயக கடப்பாடு என்ற கேனத்தனமன வாதத்தை தவிர வேறு நியாயங்கள் கிடையாது.

இரண்டாவது விஷய்ம் என்னவெனில், ஒரு பக்கம் இந்திய தேசியம் என்பதை தூக்கிபிடித்து அதற்காக என்னவகை வாதங்களையும் முன்வைப்பவர், இவர் நம்பும் வரையரைக்குள் வராதவர்களை மோசமாய் சித்தரிப்பவர், 'அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்' என்று சொல்லி ரொம்ப யோக்கியமாய், இந்த இடத்தில் மட்டும், இந்திய தேசிய பாசம் மறந்து போய் அல்லது தமிழகத்து மீனவர்கள் இந்தியர்கள் என்பது மறந்து போய், இலங்கை மீனவர்களுக்கு ஆதரவாய் வாதத்தை முன்வைக்கிறார். என்னவானாலும், யார் யாரை கொள்ளையடித்தாலும், எவன் எவன் நாட்டை ஆக்ரமித்தாலும், தன் நாட்டின் நலனை முன்வைத்து பேசுவதுதானே இவர்களை பொறுத்தவரை தேசியம். அதைத்தானே எல்லா இடத்தில் எல்லா தேசியவாதிகளும், இங்கே இவரும் செய்கிறார். இங்கே மட்டும் என்ன நடுநிலை ஹிபாக்ரசி வேண்டியிருக்கிறது!

அடுத்து நான் எழுதியது, 'புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே!'

வந்தியாவின் பதில்: "உங்கள் பிரச்சினை ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும், தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது."

தலை சுற்றுகிறது. என்னய்யா பதில் இது! 'இந்திய இராணுவத்திற்கும், பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை' வைத்து, நான் கெட்ட கேள்விக்கான பதிலை எப்படி அய்யா புரிந்து கொள்ள முடியும? விவேக் பாணியில் கேட்கவேண்டுமென்றால்' 'ஏம்பா நீ சின்ன வயசிலேர்ந்தே இப்படித்தானா, இல்லே அப்பப்பதான் இப்படி ஆவியா?'

புலிகளின் கப்பலை துரிதமாய் செயல்பட்டு, இடைமறித்து, தாக்குவதை பற்றியோ, தளைபடுத்துவது பற்றியோ நான் எந்த கருத்துமே சொல்லாவிட்டாலும்,அதை திரிப்பதை கூட சும்மாவிடலாம். வந்தி வெட்டி ஒட்டிய ஒருவரி அடங்கிய அந்த பத்தியில் நான் கேட்டது, அதை செய்ய வக்குள்ளவர்கள், இந்திய கடற்பரப்பில் மீனவர்களை கடற்கரை வரை துரத்தும் இலங்கை படையினர், தன் கடற்பரப்பில் காரியமாற்றி விட்டு திருப்ப அனுமதிப்பதும், திரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதது பற்றி. அதற்கு பதிலாக ' ஜனநாயகம், பாசிசம்' என்று உளருவதை பார்த்தால், ஆசாமி நார்மல்தானா என்று சந்தேகம் வருகிறது. (நார்மல்தான், ஆனால் தான் நினைப்பதை சாதிக்க விரும்பி, தர்க்க சுயமைதுனம் செய்தால் இப்படி எல்லாம் நேரிடும் என்று தெரியும்.)

(எனக்கு மற்றும் வாசிப்பவருக்கு ஏற்படும் அலுப்பு மட்டுமின்றி, வேறு காரணங்களாலும் இங்கே நிறுத்த வேண்டியிருக்கிறது. வந்தியதேவன் அளவிற்கு என்னால் படுவேகமாய் எழுத முடியாதுதான், மேலும் இதை எவ்வளவு தூரம் தொடர்வது என்பதும் தெளிவில்லை. அதனால் அடுத்தவாரம், வந்தியதேவன் தன் தொடரை முடித்த பின்பு முழுமையாய் பார்க்கலாம். ஒருவேளை முன்னமே எழுதினாலும் எழுதலாம், எழுதாமலே கூட போகலாம்.)

3 Comments:

Blogger வன்னியன் said...

ரோசா,
இது மிகச்சிக்கலான் விசயமாகவே படுகிறது.
இதுபற்றி என்தரப்பை நானெழுதிய பதிவைப் படியுங்கள்.

4:20 AM  
Blogger Vanthiyathevan said...

ரோஸா,

விடுபட்டது:

http://vanthiyathevan.blogspot.com/2006/04/4.html

நன்றி.

4:43 AM  
Blogger Vanthiyathevan said...

இறுதியாக:

http://vanthiyathevan.blogspot.com/2006/04/5.html

நன்றி.

6:14 AM  

Post a Comment

<< Home

Site Meter