கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Tuesday, April 11, 2006

காட்சியும் கதையும்!

மேலும் பேசுவதோ எதிர்வினை வைப்பதோ பயனற்றது, அல்லது அதற்கான தேவை இல்லாதது என்று கருதியே நிறுத்தியிருக்கிறேன். முத்துவிற்கு என்ன நோக்கமோ, வேண்டுமென்றே எல்லாவற்றையும் திசை திருப்பி திரித்து தர்க்க சுயமைதுனம் செய்து, ஸ்கலிதத்தை முகத்தில் அடிப்பவரை, ஏதாவது கிடுக்கிப் பிடி கேள்வி கேட்டு, தன் வாதம் எதற்காவது செவி சாய்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். அது எப்படியிருந்தாலும், முத்து சொல்வதையும் நான் ஏற்கவில்லை. உதாரணமாய் இந்தியாவை எல்லோரும் கிள்ளுக்கீரையாய் நினைக்கிறார்கள் என்பதை. இலங்கை உட்பட யாரும் அப்படி நினைக்கவில்லை, இலங்கையின் அத்துமீறலும் கிள்ளுக்கீரையாய் நினைப்பதனால் விளைந்தது அல்ல என்றே நினைக்கிறேன். அவரது பழைய பின்னூட்டத்திற்கு பதிலாகவும் ஏற்கனவே இதை சொல்லியிருக்கிறேன். ஒரு உதாரணம் வேண்டுமெனில் இலங்கையில் தனது தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமேரிக்காவின் நெடுநாளய அவா. இன்னமும் இலங்கை அதற்கு இடமளிக்காமல் இருப்பது, இந்தியாவை கிள்ளுக்கீரையாய் நினைக்காததனால் மட்டுமல்ல, இந்தியாவின் சொல்லுக்கு இலங்கை எத்தனை மதிப்பளிக்கும் என்பதனாலும்தான்.

வந்தியத்தேவன் நான் 'இந்திய எல்லை, அதன் இறையாண்மை' பற்றி கவலைகொண்டு எழுதியதாக சொல்லி(அல்லது அவரது முதல் பதிவில் சொன்னது போல் அவ்வாறு நக்கலடித்து), இந்த விஷயத்தில் நானும் தங்கமணியும் 'வேறுபடுவதை' சொல்லி, சில வாதங்களை தன் வழக்கமான பாணியில் முன்வைக்கிறார். அதற்கு பதில் சொல்வது நோக்கமில்லை எனினும், ஒரு தெளிவிற்காக என் கருத்து பற்றிய தவறான புரிதலைகளை களையும் பொருட்டு, இந்த தேசிய இறையாண்மை சமாச்சாரங்கள் பற்றி எழுத வேண்டியுள்ளது. வந்தியத்தேவன் நான் எழுதியதை இங்கே திரித்ததாக நான் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட தவறான வாசிப்புகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

இது தொடர்பாக முடிந்தவரை சுயதெளிவுடன் வார்த்தைகளை கவனமாக கையாண்டிருப்பதாகவே எண்ணுகிறேன். நான் இந்திய எல்லை, அதன் இறையாண்மை இவற்றை முன்வைத்து கேட்ட கேள்விகளை நான் மட்டுமல்ல, ஒரு ஜப்பான்காரனும், பிரஞ்சுகாரனும் கூட கேட்கமுடியும். இந்திய எல்லை, இறையாண்மை இவற்றை பற்றி கவலைப்படாமல், அலட்டாமல், அதன் மீதான சவாலை அத்துமீறலை இந்தியா எப்படி அனுமதிக்கிறது என்று கேட்பதன் மூலம், அதற்கான காரணம் பிண்ணணி பற்றி அறிவதும் அதை முன்வைத்து பேசுவதும்தான் முக்கியமே ஒழிய, இதை சொன்னதனால், கவலை இறையாண்மை பற்றியதானது என்பதாகாது.

நம் மீது கவியும் கட்டாயம் நிர்பந்தம், எதிர்ப்பதனால் ஏவப்படக் கூடிய வன்முறை, இவற்றை மீறி, இந்தியா என்ற கட்டமைப்பை, வசதி அனைவரது பாதுகாப்பு, பொருளாதார காரணிகள் இன்னும் பல பல விஷயங்களை மனதில் கொண்டும் ஒப்புகொள்கிறேன். அதை விட முக்கியமாக, இந்தியாவின் வலிமை குறிப்பாய் அதன் ராணுவ வலிமையை மனதில் கொண்டு, இந்த சட்டகத்தை உடைக்க நினைக்கும் எல்லாவகை போராட்டங்களும், அந்த போராட்டம் சார்பானதாக சொல்லி கொள்ளும் மக்கள் மீது பாயக்கூடிய வன்முறை உயிர்பலிகளை மனதில் கொண்டேனும், இந்த சட்டகத்தில் கை வைக்கக் கூடிய முயற்சி எதையும் பொதிவானதாக காணமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த கட்டமைப்பு ஏதோ மாற்றத்திற்கு உட்படாத விஷயமாகவோ, இயற்கையானதாகவோ, அதை கேள்விகுட்படுத்துவது எல்லா சந்தர்ப்பங்களிலும் பாவமானதாகவோ, அதன் பின் திட்டமிட்டு சிறு வயது மூளையில் பசுமரத்தாணி போல் அடித்ததில் தொடங்கி, ராட்சத ஊடகங்கள் மூலம் கற்பிக்கப் பட்ட புனிதத்தை ஒப்புக்கொண்டு அதை ஏற்கவில்லை. அந்த வகையில் இறையாண்மை போன்ற வார்த்தைகளுக்கு, அதன் பின்னுள்ள கற்பிதமான அருத்தங்களுக்கு எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்திய தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப் படும் பல நியாயமற்றவைகளை, அநியாயங்களை, பல (நான் மொழிரீதியாய் அடையாளம் காண விரும்பும் தமிழினம் உட்பட) இனங்கள் மீதான வன்முறைகளை, என் சுய கணிப்பின் படி தங்கமணியை விட இன்னும் அதிகமாகவே (என் பதிவுகளில் அதற்கான ஆதாரம் இருக்கும் என்று தோன்றாததால்) மன அளவில் எதிர்கிறேன் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நானும் தங்கமணியும் தெளிவான வகையில் வேறுபடுவது தமிழ்தேசியம் குறித்தான பார்வையில் மட்டுமே. தமிழ்தேசியம் பேசப்படுவதற்கான நியாயத்தையும், அவசியத்தையும் நான் நிச்சயமாய் அங்கீகரிக்கிறேன். ஆனால் அதையும் இயற்கையானதாகவும், புனிதமானதாகவும் கற்பிக்கப் படுவதையே நிராகரிக்கிறேன். அதைவிட முக்கியமாய் தேசியம் சார்ந்த ஒரு லட்சியத்தை முன்னிறுத்தி பல வன்முறைகள், படுகொலைகள் நியாயப்படுத்தப் படுவதையும், கண்டிப்பதில் ஒரு தேர்தெடுத்தல் நிகழ்வதையும், இதர பாசிச சொல்லாடல்கள் என்று கருதப்படுவதையும் எதிர்கிறேன். அந்த வகையிலேயே தங்கமணி, சுந்தரவடிவேல் ஆகியோருடன் கடுமையாய் முரண்பட்டு, கண்டனங்களுடன் அவர்கள் எழுதியதை நான் எதிர்த்து எழுதியதும் நிகழ்ந்தது.

சிவக்குமார் கூட நான் இது குறித்து (புலிகள், தமிழ் தேசியம் போன்றவை குறித்த விமரசனக்களை) அதிகமாய் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். எழுதுவது என்பதை ஒரு திட்டமிட்ட செயல்பாடாக நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை. அந்தந்த சந்தர்ப்பங்களில், தானாக அது நடந்து கொண்டிருக்கிறது. சும்மா இருப்பதை விட இது சிறந்ததாக எனக்கு தெரிகிறது. ஆனாலும் இதில் எழுதுவது என்பதை சூழநிலையே தீர்மானிக்கிறது. ஷோபாசக்திக்கு புலிகளை விமர்சித்து எழுதுவது ஒரு இருப்பு குறித்த பிரச்சனையாகவும், உயிர்வாழ்தலுக்கு பொருளுணர்துவதாவதாகவும், சூழலின் தேவையாகவும், இன்னொரு பக்கம் உயிராபத்து ஏற்படுத்துவதாகவும் இருக்கக் கூடும். எனக்கு அப்படி அல்ல. சொல்லப் போனால் வாய்த்திருக்கும் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புலிகளை, தமிழ் தேசியவாதிகளை திட்டுவது மிகவும் எளிது. அதன் சொல்லாடல்களை கட்டுடைப்பதும் கம்புசுத்தும் வேலையல்ல. ஆனால் இந்திய தேசியத்தை எதிர்ப்பது, அதன் சொல்லாடல்களின் புனிதத்தை ஏற்காமல் இருப்பது குட்டி பூர்ஷ்வா சொகுசு வாழ்க்கைக்கு உலை வைக்கக் கூடியது. இதை மட்டும் அப்படியே சூத்திரமாக கொள்ளாமல், சந்தர்ப்பத்திற்கு ஏற்றார்போல் எதிர்வினை வைப்பதை மட்டுமே என் இருத்தல் சார்ந்த செயல்பாடாக நான் நினைக்கிறேன்.

மேலும் இவற்றில் ஒரு அடிப்படை பிரச்சனை இருக்கிறது. என்னை பொறுத்தவரை சிங்கள் அரசு, புலிகள் அமைப்பு இரண்டையுமே பாசிச அமைப்புகளாகத்தான் கருதவேண்டியுள்ளது. இதையும் சமமான அழுத்தத்துடன் சொல்லிவிட முடியாது. சிங்கள பாசிசத்தின் எதிர்விளைவாகவே புலிபாசிசமும் நிகழ்ந்திருக்கிறது. அதைவிட முக்கியமான ஒரு வித்தியாசமுண்டு. சிங்கள அரசு முற்றிலும் லெஜிடிமைஸ் செய்யப்பட்டு, எல்லா நாடுகளாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. புலிகள் அமைப்பு பல நாடுகளால், இப்போது கடைசியால் அடிமடியில் கைவைக்கும்விதமாக கனடாவிலும் தடை செய்யப் பட்டுள்ளது. இந்த வித்தியாசங்களை கணக்கில் கொள்ளாமல் பேசமுடியாது. அதே நேரம் இந்த வித்தியாசத்தை மட்டும் சொல்லி சொல்லி ஜல்லியடித்து படுகொலைகளை நியாயப் படுத்தவும் முடியாது.

அ.மார்க்ஸ், சோபாசக்தி இவர்கள் தேசியம் என்பதையும், அதை எதிர்பதையும் (தேசியம் என்பது பாசிசத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் என்று) சாராம்சபடுத்தி பேசுவதையும், குறிப்பாக தமிழ் தேசியம் குறித்த அவர்களின் கருத்தையும் நான் முழுமையாய் ஏற்கவில்லை(அதாவது முழுமைக்கு குறைவாக ஏற்றுக்கொள்கிறேன்). குஷ்பு பிரச்சனையில் தேசிய மற்றும் கலாச்சார சொல்லாடகள் பாசிசமாய் வெளிபட்டதாகவே நானும் நினைக்கிறேன். ஆனாலும் தேசியம் என்பது சமய சந்தர்பங்களுக்கு ஏற்ப ஒரு ஆயுதமாய் பயன்படுவதையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தேசியம் சார்ந்த அனைத்தும் முழுவதும் கற்பிதம் மட்டுமே என்பதாகவும் என்னால் பார்க்க இயலவில்லை. அடையாளம் பற்றி பேசுவதற்கான தேவை, அந்த வேட்கைக்கான தீனி, இவற்றை மனதில் வைத்து கற்பிதங்களும் தேவை என்றுதான் நினைக்கிறேன். இது போன்ரவற்றை மிகச் சரியாக புரிந்துகொண்டே, பெரியார் தமிழ் சாராமல், திராவிடம் என்ற கற்பனை தேசியம் சார்ந்து தன் சொல்லாடல்களை முன்வைத்ததாய் நினைக்கிறேன்.

ஏதோ விளக்கமளிக்க வந்தது எங்கேயோ போய்விட்டது. இதன் மூலம் தொடரக்கூடிய விவாதத்தை வரவேற்றாலும் நான் பங்குகொள்ள இப்போதைக்கு எண்ணமில்லை. அதனால் யாவருக்கும் சொல்வதானால் நான் தமிழ்தேசியத்தை எதிர்த்தாலும், அதை ஒரு இந்திய தேசியவாதி என்ற நிலைப்பாட்டில் இருந்து செய்யவில்லை, மற்றும் என் பதிவுகளில் வெளிபடுவது மீனவர்கள் வாழ்வு சார்ந்த அக்கறைதானே ஒழிய இந்திய இறையாண்மை குறித்த அக்கறை அல்ல. இதை தெளிவு படுத்திவிட்டதால் மேலே ஜல்லியடிக்க சிலருக்கு வசதி என்றாலும், தங்கமணி என் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதில் நான் முரண்படாததிலும், எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதைக்கு இப்படி நிறுத்திகொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

1 Comments:

Blogger ஜூலியன் said...

Rozavasanth we may differ in many ways in looking indian and tamil nationalisms. However one point we may agree is that we can convince the people whose line of thought is 'It does not matter if we loose one eye. All what matters is this process might make our opponents loose both eyes.'

5:50 AM  

Post a Comment

<< Home

Site Meter