கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Wednesday, April 12, 2006

மீனவர் பிரச்சனை - விவாதம்.

இதுவரை இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளையும் மற்ற செய்திகளையும், ஒரு வசதிக்காக தொகுத்து வைத்திருக்க மட்டும் இந்த பதிவு. இதற்கு பிறகு எழுதப் படும் பதிவுகளையும், கண்ணில்படும் செய்திகளையும் இங்கே சேமிக்க உத்தேசம்.

ஏற்கனவே ஒருமுறை தொகுத்த பின்பு வந்தியதேவன் மேலும் இரண்டு பதிவுகள் எழுதியுள்ளார். வழக்கமான ஜல்லியடிப்புகளை(என்று நான் நினைப்பதை) தாண்டி அவரது கடைசி பதிவு மீண்டும் தகவல்பூர்வமாக இருப்பதால், அதை சீரியசாகவே எடுத்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதே பதிவில் (நான் தவறவிட்ட) வேறு சில பதிவுகள் பற்றிய தகவல்களும் உள்ளன. ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்புக்கு உரியது. ' கச்சத்தீவை மீட்போம்' என்று சுமார் 8 (சரியாய் நினைவில் இல்லை) வருடங்கள் முன்பு போராட்டக் களத்தில் இறங்கிய ராமதாஸ் போன்றவர்களின் குரல்களை விட, ஜெயலலிதா போன்றவர்களின் குரல்களுக்கு நடைமுறை சாத்தியப்பாடு அதிகம் என்ற காரணத்திற்காக வாவது இதை வரவேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதாவின் குரல் போலியானது என்று அவரை தீவிரமாய் எதிர்த்து வருபவர்களுக்கு தோன்றலாம். ஆனால் இது போன்ற குரல்கள் எங்கு ஒலித்தாலும் அவற்றை நிபந்தனை இன்றி ஆதரிப்பதே, இந்த பிரச்சனை குறித்த கரிசனம் கொண்டவர்கள் செய்யவேண்டிய (அரசியல் லாபங்கள் தவிர்த்த) நடவடிக்கையாக எனக்கு தோன்றுகிறது.

' வெறும் கேள்வியின் நாயகனாய் வலைப்பதிவில் வெட்டி வேலை செய்பவர், பிரச்சினையின் கிளை வேர்களைப் பற்றவாவது முயற்சிகள் செய்திருக்கலாமென்ற ஆதங்கத்தை இங்கே பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று என்னை பற்றி ஆதங்கப்படுவதாய் வந்தியத்தேவன் காட்டிக் கொண்டிருந்தார். தான் நோக்குகிற(அல்லது கைகாட்டுகிற) கோணத்தில்தான் பிரச்சனையை அணுகவேண்டும், அவ்வாறு அணுகாவிட்டால் லேபிள் ஒட்டும் வேலை செய்பவர்களிடம் எந்த விவாதமும் சாத்தியமில்லை. வந்தியத்தேவனை போல இந்திய கடற்படை, அல்லது இந்தியா இன்னும் தமிழ்தேசிய கருத்துக்கள், புலிகள் என்று எதற்குமே வக்காலது வாங்கவோ, பாதுகாக்கவோ எனக்கு எந்த தேவையும் கிடையாது. பிரச்சனையின் வேர் கிளை என்று தனக்கு வசதிப்படும் ஒன்றை கற்பிதம் செய்யும் தேவையும் கிடையாது. திறந்த மனதுடன் பிரச்சனையை அணுகுவது மட்டுமே என் நோக்கம். வந்தியதேவன் திமிருடன் நினைப்பது போல் அல்லாமல், இணையத்திலும் பத்திரிகைகள் வாயிலுமாக இந்த பிரச்சனை குறித்து எனக்கு எட்டும் தகவல்களை தேடி படித்து கொண்டுதான் இருக்கிறேன். அவை குறித்தும், அவைகளை முன்வைத்தும் எளிதான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை, எடுப்பதில்லை. சரியாக கவனித்தால், தன் கடற்பரப்பிற்குள் இலங்கை கடற்படை நிகழ்திய அத்துமீறல் பற்றி இந்தியா காட்டும் மௌனம்,'அலட்சியம்' பற்றியும் கேள்விகள்தான் கேட்டிருக்கிறேனே ஒழிய எதையும் முடிவாக சொல்லவில்லை. (வந்தியதேவன் அதை பற்றி திசை திருப்பலும், தேர்தெடுத்த சப்பைக் கட்டு மட்டும் கட்டுவதை காணலாம்.) ஆனாலும் பெரிய அளவில் விஷய ஞானம் இல்லாததை ஒப்புகொள்வதிலும் தயக்கம் கிடையாது. மிக தெளிவாக தங்கள் சார்புகள் எந்த பக்கம் என்று தெரியும் வகையில், 'இந்துத்வா, வெள்ளை கலர், ஆரியம்' என்று மற்றவர்கள் ஒட்டாத லேபிளை ஒட்டுவார்கள் என்று தாங்களாக அசட்டு நகைச்சுவை செய்து வரும் முகமுடி, வந்தியத்தேவன் போன்றவர்கள்தான் மாற்று குரல்களுக்கு தங்கள் மனதை திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த அளவுக்கு விவாதம் நடந்ததையும், இனி தொடர்ந்து நடபெறப் போவதையுமே நான் எழுதிய நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறேன்.

எனக்கு தெரிந்து இதுவரை இந்த பிரச்சனை பற்றி பேசும் பக்கங்களின் சுட்டிகள் கீழே. மேலே வரும்போது சேர்க்கப் படும்.

இன்னும் எத்தனை காலம்தான்...??!! -1

இன்னும் எத்தனை காலம்தான்..! -2

வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!-1

வன்னியன் எழுதிய தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை பற்றிய பதிவு

வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.

வந்தியத்தேவனின் விவாதக் கூ(கு)த்துகள்-1

விவாதக் கூ(கு)த்துகள் - 2

எனது இப்போதைக்கு!

விவாதக் கூ(கு)த்துகள் - 3

கச்சத் தீவை நிரந்தர குத்தகையில் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்: ஜெயலலிதா பேச்சு
(நன்றி முகமுடி)

கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு (வந்தியத்தேவன்)

கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு - 2 (வந்தியத்தேவன்)

கடைசியாகக் கச்சத்தீவு

கச்சத்தீவு பற்றி என்னாரின் பதிவு.

தவறு யாருடையது? நாமக்கல் ராஜா.

சிங்கள மீனவருக்கு ஒரு நீதி, தமிழ் மீனவருக்கு ஒரு நீதியா? மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தமிழருக்கெதிரான கூட்டு சதி

தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை


(இன்னும் வரும், தமிழ் மீனவர்களின் பிரச்சனைகளோடு தொடர்புடைய பதிவுகள்/இணைய பக்கங்கள் பற்றி இங்கே அறிய தந்தால் நன்றி.)

17 Comments:

Blogger ROSAVASANTH said...

http://vanthiyathevan.blogspot.com/2006/04/blog-post_11.html


வந்தியத்தேவன்,

நீளமாக தலைப்பு வைத்ததால் உங்களின் கடைசி பதிவை Bளாகர் விழுங்கிவிட்டது. உதாரணமாய் 'டாக்டர் செல்வி' என்ற அடைமொழி இல்லாமல் 'ஜெயலலிதாவின் பங்கு' என்று தலைப்பு வைக்கலாம். (அதானால் பதிவு நிலைத்திருப்பதோடு ஜெயலலிதாவின் தீவிர எதிர்பாளர்களுக்கு (எனக்கு அல்ல) சில முன்முடிவுகள் வாசிக்கும் முன் ஏற்படமாலும் இருக்கலாம்.) ஏதோ மனதிற்கு தோன்றிய பரிந்துரை மட்டுமே, மற்றபடி முழு தலைப்பையும் பதிவின் உள்ளே பெரிதாகவே என்னை போல வைக்கலாம். இந்த பின்னூட்டம் எழுதுவதன் நோக்கம் இதை சொல்வது அல்ல, கீழே வரும் வேண்டுகோளை தருவது.

உங்கள் பதிவுகளில் வரும் பல தகவல்களுக்கு சில சுட்டிகள் அல்லது தகவல் கிட்டிய இடம் என்பதாக அடைப்புக் குறியினுள்ளேயே சில ஆதாரங்களை தர இயலுமா? இதில் சிரமம் இருக்கலாம், ஆனால் இத்தனை உழைப்பை காட்டும் நீங்கள் இன்னும் சற்று சிரமம் எடுத்தால் பலருக்கு உதவியாயிருக்கும் என்று தோன்றுகிறது. வெறும் நம்பகத் தன்மையை கருதி இதை கேட்கவில்லை, வாசிப்பவருக்கு(குறிப்பாக எனக்கு) மேற்படி செய்திகளை அறியவும், தேடவும், கருத்தை உருவாக்கிகொள்ளவும் உதவுவதை மனதில் கொண்டே கேட்கிறேன். இது வெறும் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே. நிறைவேற்றுவதில் பிரச்சனை இருந்தால் மன்னிக்கவும்,(எல்லாவற்றையும் எழுதி முடித்த பின்பு ஒரு தனிப்பதிவாகக் கூட இதை செய்யலாம்). நன்றி!

12:10 AM  
Blogger ROSAVASANTH said...

http://urpudathathu.blogspot.com/2006/04/blog-post_20.html

நாராயணன், பேட்டியை தந்ததற்கு மிகவும் நன்றி. எப்போதும் போல உணர்சியையும் அறிவையும் மிகவும் தூண்டுவதாய் இருந்தது. அளவுக்கு மீறி ஆட்கொண்டுவிட்டதாலும், அடிக்கடி சிந்தனை அலைபாய்வதாலும் என்னால் முழுவதும் படிக்கக் கூட முடியவில்லை.

//At one point when the Tehelka expose happened, I thought, thank God the BJP is corrupt, thank God someone’s taken money, imagine if they had been incorruptible, only ideological, it would have been so much more frightening.//

டெகெல்கா விவகாரம் வெளிவந்த போது கிட்டத்தட்ட இதே போலவே, 'பாஜகவும் ஊழல் செய்யும்' என்பது குறித்த சந்தோஷத்தையே என் நண்பர்களிடம் வெளிப்படுத்தினேன். எதிரியும் யோக்கியனல்ல என்ற அற்ப சந்தோஷம் அல்ல. ஒருவேளை இந்துத்வவாதிகள் ஊழலற்றவர்களாக நேர்மையானவர்களாக இருந்திருந்தால் அது மிக மிக அபாயகரமானதாக இருந்திருக்கும்.

இதுவரை படித்ததில் என்னை கவர்ந்தது,

//But look at the reaction to the growing influence of the Maoists — even by political analysts it’s being treated as a law and order problem, not a political problem — and like militancy in Kashmir and the Northeast, it will be dealt with by employing brutal repression by security forces or arming local people with weapons that will eventually lead to a sort of civil war. That seems to be perfectly acceptable to Indian ‘civil society’//

தீவிரவாதம் பற்றி 'சோ'த்தனமாய் கூச்சலெழுப்பும் அனைவரும் இந்த அழிவு நிலைக்கு தள்ளுவதையே கங்கணம் கட்டி கொண்டிருப்பதாய் தெரிகிறது. கங்கணம் கட்டியதை எல்லாம் மறந்துவிட்டு அப்போது முற்றிலும் வேறு லாஜிக்கில் பேசுவார்கள்

12:43 AM  
Blogger ROSAVASANTH said...

http://islaamicinfo.blogspot.com/2006/05/blog-post_02.html

அ. மார்க்ஸின் கட்டுரையை ரவியின் பதிவின் மூலம் படித்தேன். அவர் எழுதியுள்ளது மகா அபத்தம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பக்கம் தான் முன்வைக்கும் அரசியலுடன் எந்த விதத்திலும் ஒத்து வராத வகையில் இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு மாறி மாறி வக்காலத்து வாங்கி வருகிறார். (நல்லடியார் எழுதியதை வழக்கமாய் படிப்பதில்லை. தாலிபான் பற்றி வெளிப்படையாய்(உள்ளே எப்படி நினைத்துக் கொண்டாலும்) எழுதுவார் என்று நினைக்கவில்லைதான்.)

ஆனால் தங்கமணி பால் பவுடரை முன்வைத்து புத்தர் சிலை இடிப்பை நியாயப் படுத்தியுள்ளாரா என்பது குறித்து எனக்கு ஐயம் உள்ளது.

//ஆனால் புத்தர் சிலைகளைக் காப்பாற்ற ஐ.நா. பணவுதவி செய்ய தயாராக இருந்தது. அதனால் தான் அச்சிலைகள் தாக்கவும் பட்டன.//

என்று சொல்வதன் மூலம், உலகத்தை கோபமுறச் செய்யும் வகையில் (provoke செய்யும் முகமாக) தாலிபான் செய்ததாக கூறுவதாக நான் நினைக்கிறேன். அவர் அடிப்படையில் சொல்லவந்தது, குழந்தை போராளிகள் பற்றி பேசுபவர்களின் இரட்டை நிலைபாடு பற்றியது. பால் பவுடர் இல்லாமல் குழந்தைகள் சாவதை தடுக்க இயலாதவர்கள்,புத்தர் சிலையை காப்பாற்ர செலவழிக்க தயாராய் இருக்கிறார்கள். சிலைகளை காப்பாற்ற அவர்கள் காட்டும் ஆர்வம் காரணமாய், உடைக்கப் பட்டதாய் சொல்கிறார் என்று நினைக்கிறேன். தவறாய் கூட இருக்கலாம். அவர்தான் விளக்க வேண்டும். அவரது 'இந்துமத' பதிவிலும், இஸ்லாம் பெண்ணுரிமை அளிப்பதாய் சொன்னதாய் எனக்கு நினைவில்லை. மாறாக ஆங்காங்கே (மென்மையாய்தான்) இஸ்லாமின் பெண்ணடைமைத்தனம் பற்றி பேசியுள்ளதாகவே நினைக்கிறேன்.

மற்றபடி நல்லடியாரின் பதிவு, இன்று பல இஸ்லாமியர்களின் சந்தர்ப்ப வேடம் எல்லாம் கண்டிக்க வேண்டியது, வெளிப்படுத்த வேண்டியது என்பதை தவிர சொல்ல எனக்கு அதிகமில்லை. நன்றி!

4:54 AM  
Blogger ROSAVASANTH said...

சொல்ல வந்து விடுபட்டது.

நீங்கள் மடல் எழுதுவதன் மூலம் அ.மார்க்ஸ் மாற வாய்ப்பு எதுவுமில்லை. அவர் எழுதுவது மத அடிப்படைவாதம் அல்ல, ஆனால் அது ஒரு கருத்தியல் அடிப்படைவாதம் மாதிரி. இது மாறுவது இன்னும் கடினம். ஏனெனில் இதற்கு (தானே நம்பி கொள்ளும்) அறிவிஜீவி பாவனை உண்டு. மேலும் அவர் சிந்தனை சுதந்திரமானது அல்ல. அவரால் உந்தப்பட்ட ஒரு பெரும் வாசக கூட்டத்தை மனநிறைவு செய்ய வேண்டி உள்ளது. அவர்கள் அனைவரும் (அ. மார்க்ஸும்)இஸ்லாத்தை உய்விக்கும் ஒரு வழியாக காண்கிறார்கள். அந்த சிந்தனையில் பிளவு ஏற்படுத்துவது அத்தனை எளிது அல்ல.

5:00 AM  
Blogger ROSAVASANTH said...

http://ravisrinivas.blogspot.com/2006/05/3.html

Eventhough I do not respect Ravi for any of his views, I never experienced the nausea, this post has created. Horrible, couldn't read this shit completely!

12:35 AM  
Blogger ROSAVASANTH said...

http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_114784603754804041.html

கம்யூனிசம் (அதைவிட மார்க்சியம்) என்பதில் பல பிரச்சனைகள் இருக்கலாம். அவைகளை கணக்கில் கொண்டு பலர், பல மறுபரிசீலனைகளுடன், மார்க்சியத்திலேயே பல்வேறு போக்குகள் இருக்கிறது. மார்க்சியதை மீறியும் தாண்டியும், மறுத்தும் பல போக்குகள் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது மிக எளிமையான அற்பமான காரணம்.

இயற்கையானது என்று சொல்லப் படுவதை மீறித்தான் பல நவீன விஷயங்களை மனித குலம் அடைந்துள்ளது. ஒருவகையில் ஜனநாயகம், ஆண் பெண் சமத்துவம் கூட இயற்கைக்கு முரணானது என்று பேசலாம். ஸாடிஸம்தான் இயற்கையானது என்று வாதிடக் கூட முடியும். இயற்கையானது என்று சொல்லி, எறும்புகளையும் தேனிக்களையும் உதாரணம் காட்டி அடிமை முறையையும், நால்வருண முறையையும் நியாயப்படுத்த முடியும், படுத்துகிறார்கள். இயற்கைக்கு எதிரானது என்று சொல்லப்படும் விஷயங்களும், அதற்கான முயற்சிகளும் இயற்கை அளித்த சட்டகத்தினுள்தான் நடக்கிறது. ஒரு வகையில் மனித குலம் இன்றுவரை இயற்க்கைக்கு எதிராக வாழ்வதில்தான் தனது சக்தியை சவாலை செலவழித்து வருகிறது.

'வல்லவன் வாழ்வான்' என்பதுதான் இயற்கையின் நியாயம் என்று எல்லா வகை ரவுடித்தனத்தையும் அனுசரித்து செல்வதை ஏற்றுக்கொள்வதுதான் தீர்வாக முடியுமா? 'வல்லவன் வாழ்வான்' என்ற இயற்கையின் விதியை எதிர்ப்பதும் இயற்கையின் சட்டகத்துனுள்ளேதான் நடக்கிறது.

பிரச்சனையை பேசுவது என்பது வேறு, இயற்கைக்கு எதிரானது என்று, ஒரு விஷயம் குறித்து எதுவுமே தெரியாமல் அதன் வறலாற்று பிரச்சனைகள்/ தவறுகள் பற்றி அறியாமல், இயற்கைக்கு எதிரானது என்று மொட்டையாய் ஜல்லியடிப்பது என்பது வேறு.

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்

1:33 AM  
Blogger ROSAVASANTH said...

http://kumizh.blogspot.com/2006/05/obc.html

சுந்தரமூர்த்தி,

நேற்று எழுதத் தொடங்கி இரண்டு வரி எழுதிய போது, (வேலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்லும்) வண்டி கிளம்பும் நேரமாகிவிட்டதால், அப்படியே மொட்டையாக உள்ளிட்டு விட்டு செல்ல வேண்டியதாகி விட்டது. இப்போதும் அதே நேரம்தான்.

நான் ரவியை பல காலமாய் தொடர்ந்து தீவிரமாய் தாக்கி வருகிறேன். இது முழுக்க கருத்து மோதலே அன்றி, எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த பகையும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் என்னுடைய தாக்குதல் அளவுக்கு மீறியதாகவும், ரவிக்கு சாதகமாக பேசவேண்டியதாகவும் உங்களுக்கு முன்பு தோன்றியிருகிறது. ஒரு முறை சங்கரபாண்டி, நானும் ரவியும் கருத்துருவ ரீதியில் ஒரே தளத்தில் இருந்தாலும், அதே தளத்தில் நேரும் சில முரண்பாடுகளால் சண்டையிட்டுக் கொள்வதாய் எழுதியிருந்தார்.(சிவக்குமார் பதிவின் பின்னூட்டத்தில்). அதை நான் கடுமையாக மறுக்க நினைத்தேன். நான் ஐடியாலஜிபடியே ரவிக்கு நேரெதிரான தளத்தில் இருப்பதாகவே நினைத்து வருகிறேன். வழக்கம் போல நேரமில்லாததால் எழுத விடுபட்டுவிட்டது.

நான் தொடக்கத்திலிருந்தே ரவியின் பார்வைக்கும் ஜெயமோகனின் பார்வைக்கும், சுஜாதாவின் பார்வைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றுதான் சொல்லிவருகிறேன். ரவி ஜெயமோகனையும், சுஜாதாவையும் தாக்குவதும் வேறு சமாச்சாரங்களில் (மற்றும் ஈகோ) என்பதாகவே என் பார்வை இருந்து வந்தது. அதனால் அவர் திடீரென்று மாறி, வேறு குரலில் பேசுவதாக எனக்கு தோன்றவில்லை. அவர் திருமா/ராமதாசின் குஷ்பு மீதான தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கியபோது கூட, அவர் திருமா/ராமதாஸ் மீதான அபிமானத்தால் செய்யவில்லை, மாறாக குஷ்பு முன்வைத்த கருத்திற்கு அவர் அடிப்படையில் எதிரானவர் என்பதால் செய்கிறார் என்றுதான் எழுதியிருந்தேன். இவைகளை நான் எதிர்த்தாலும், ரவி கருத்து என்பதாக தான் நினைப்பதை எழுதுகிறாரே ஒழிய, உள்நோக்கத்தோடு எதையும் செய்வதாக எனக்கு தோன்றவில்லை.

எல்லாவற்றையும் மறு வாசிப்பு மறு பரிசீலனை செய்யவேண்டியுள்ளது. அப்படி செய்யாத எந்த அரசியல் நிலைபாடும்,( அதற்கு ஏற்படும் தொய்வுகளை தவிர்த்து விட்டு) ஒரு மொண்ணையான இயக்கமாக மாறுவதுடன், ஒரு கருத்தியல் அராஜமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. அந்த வகையில் 'ஆரிய படையெடுப்பு கோட்பாடு', இந்துத்வம் பற்றிய நமது புரிதல், இடவொதுக்கீடு, பெரியார் முன் வைத்த அணுகுமுறை அனைத்தையும் நாம் புதிய வெளிச்சங்களில் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. (மறுவாசிப்பு என்பது பல சமயங்களில் மறுகட்டமைப்புகளாகவும், நமது விருப்பங்களுக்கு/நிலைபாடுகளுக்கு ஏற்ப புதிய கருத்தியல்களை வளைப்பதாகவும் உருமாற வாய்ப்பும் உண்டு.) அந்த வகையில் ரவி எதையாவது எங்காவது தனது அவசர வாசிப்பில் படித்து உளர வாய்ப்புள்ளது. (நான் அதிகம் படிப்பதில்லை என்பதையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.)

'சாதியை பாதுக்காப்பது இந்துத்வத்தின் நோக்கமல்ல' என்று தங்கமணியின் பதிவில் ரவி ஒரு எச்சம் விட்டிருப்பார். ஒரு வகையில் அவர் சொல்வது (பகுதி)உண்மைதான் என்று நினைக்கிறேன். விஹெச்பி போன்றவை எல்லாம் சாதி கட்டுமானத்தை, அதன் படிநிலையை காப்பதை நோக்கமாக கொண்டவை. ஆனால் ஆர். எஸ். எஸ்ஸை முழுமையாக அப்படி சொல்ல முடியுமா என்பது சந்தேகமே! ஹெட்கேவார் அடிப்படையில் வர்ணாசிரம தர்மத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர் என்றுதான் தெரிகிறது. அவருக்கு சாதியை பாதுகாக்கும் நோக்கங்கள் இருந்திருக்கலாம். (இந்துத்வ நோக்கங்களுக்காக சற்று நெகிழ்ச்சியாகவும் பேசியிருக்கலாம்.) ஆனால் சாவர்க்கரை எடுத்துக் கொண்டால், அவர் ஜாதியமைப்புக்கு எதிராக பேசியிருப்பதை காணலாம். அம்பேதகார் (மற்றும் பல அம்பேத்காரிஸ்டுகள்) கூட சாவர்கரை பாராட்டியிருப்பதை காணலாம்.

சாவர்கரின் நோக்கம் ஒரு பலம் வாய்ந்த இந்துஸ்தானத்தை அமைப்பது. அதற்கு 'இந்து மதம்' என்ற சொல்லாடலை பயன்படுத்துவது. பலம் வாய்ந்த வல்லரசான இந்தியா என்ற கனவை கொண்ட எவருக்கும், இந்தியாவின் ஜாதி பிரிவினை என்பது, அதற்கான மிக பெரிய இடையூறு என்பதை அறியலாம். அந்த வகையில் சாவர்காருக்கு ஜாதி உவப்பான விஷயம் அல்ல. ஆனால் அதே நேரம் சாதியை ஒழிப்பது அதற்கான வேலைகளில்ன் இறங்குவது என்பதும், அதற்காக ஆதிக்க ஜாதிகளின் உரிமைகளில் கை வைப்பது என்பதும் இந்தியாவை இன்னும் பலவீனமாக்கும் முயற்சிதான். சாதிக்கு எதிரான நடவடிக்கைகள் என்பது, சாதியின் இருப்பு என்ற தடங்கலை விட இன்னும் அதிகமான பாதிப்பை, சாவர்கரின் வல்லரசு கனவிற்கு ஏற்படுத்தும். இது ரொம்ப நுட்பமான விவகாரம்.அதைவிட நுட்பமானது ஆர். எஸ். எஸ் காரர்களின் அணுகுமுறை. அவர்களுக்கு மேலே சொன்ன இரண்டையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இவை எப்படி இருந்தாலும், நாம் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம், சாவர்கர் தனது இந்தியாவை பலமாக்கும் கனவிற்கு -நாஜிக்களைப் போல - ஒரு ரேசிஸ்ட் அர்த்தம் பொதிந்த மதம் என்ற சொல்லாடலை பயன்படுத்த முயல்வது. (அதில் ரேசிசம் இல்லை என்பது அரவிந்தன் போன்றவர்களின் வாதம். ஆனால் இங்கே ரேசிசம் என்பது அதன் நேரடியான பொருளில் பயன்படுத்தவில்லை.) காந்தியும் தனது அரசியலுக்கு இந்து மதம் என்ற சொல்லாடலை பயன்படுத்தினார். ஆனல் அது மிகவும் ஜனநாயகத்தன்மை வாய்ந்தது. சாவர்கரின் சொல்லாடல்களுக்கு நேரதிர் அருத்தம் கொண்டது. அந்த வகையில் சாவர்கர் -ஒரு வருணாசிரமவாதியான ஹெட்கேவாரை விட, சாதியை இந்து மதத்தை முரட்டுத்தனமாய் பாதுகாக்க நினைக்கும் தீவிர இந்துத்வாவை விட - இன்னும் ஆபத்தானவர். ரவிக்கு இதை சொல்ல வராது. இந்த அளவிற்கு சிந்தனை பயணிக்காது.

ரவி எதை படித்தார் என்று எனக்கு சத்தியமாய் தெரியாது. ஆனால் இப்படிபட்ட விவரங்களை மேலோட்டமாய் எங்காவது படித்து தொலைத்திருக்கலாம். அதன் விளைவாய் அவர் இட்ட எச்சம்தான், 'இந்துத்வாவினருக்கு சாதியை பாதுகாக்கும் நோக்கம் இல்லை' என்ற மொட்டையான ஒரு வரி. அதற்கு சாதகமாக அவருக்கு எதுவும் சொல்ல வராது. மஞ்சுளா நவனீதன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய அளவிற்கு கூட இல்லாமல் அறையும் குறையுமாக எதையாவது, ஏற்கனவே சொல்லப் பட்ட வாதங்களை உளருவார், உளறினார்.

அவரது மற்ற இடவொதுக்கீடு பற்றிய வாதங்களும் இதே போலவே இருக்கிறது. தனது முந்தய இடவொதுக்கீடுக்கான ஆதரவு பார்வையை, பரிசீலித்து இப்போது வேறு நிலைபாடு எடுத்துள்ளதாக கூறுகிறார். (தாராளமாக அப்படி செய்யலாம். பரிச்சீலித்து நிலைபாடுகளை மாற்றிக்கொள்வதுதானே அறிவுபூர்வமான அணுகுமுறை.) ஆனால் அதற்கான( முந்தய நிலைபாட்டை பரிசீலித்து வந்தடைந்ததற்கான) எந்த தடயமும் அவர் எழுத்தில் இல்லை. மாயவரத்தானும், மற்ற மாயவரத்தான்களும் தரும் வாதம்தான் அவரிடமிருந்து வெளிபடுகிறது. இதன் உச்சம்தான் அதிமுக பிராமண சங்கத்தை முன்வைத்த அவரது பதிவு. (மற்றவர்களிடமிருந்து தான் வேறுபடுவதை, வாசிப்பவர்கள் உணரமுடியும் என்று மொட்டையாக இன்னொரு எச்சம் விடுவார்.)

துரதிர்ஷ்ட வசமாக நமது வலை சமூகத்தில் அதிகம் படிப்பவராக(அதாவது அதிகம் படிக்க வேண்டிய விஷயங்களை வாசிப்பவராக) அவர்தான் இருக்கிறார். கண்டதையும் படித்து அது குறித்து ஒரு தனக்குள்ளான அசைபோடல் இல்லாமல், தனது மட்டையடி வாதங்களால், இதற்கு முன்னால் அவர் யாரை எதிர்ப்பதாக சொன்னாரோ, அவர்களின் தரத்தை விட கீழாக எதையோ சொல்கிறார். இப்படித்தான் என் புரிதல் இருக்கிறது.

இன்றய தேவையை முன்வைத்து ரவி பற்றி ஒட்டு மொத்தமாக, விவாதக் கூத்தில் எழுதலாம் என்று இருந்தேன். இப்போதைக்கு மீண்டும் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் இங்கே தட்டி வைத்திருக்கிறேன். நிச்சயமாய் எதிர்காலத்தில் இது பற்றி மீண்டும் பேசவேண்டி வரும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. நன்றி.

4:39 AM  
Blogger ROSAVASANTH said...

http://kumizh.blogspot.com/2006/05/obc.html

//I am no A.Marx or Gnani or
Solai to blindly support reservations for muslims or OBCs.//

SuMu, I am sorry, I have to put my objection, atleast in few words. If you do not publish, I will write a new post on this(of course objecting to you aswell).

Ravi is free to write any amount of shit he wishes to write. But should stop wrting crap on Gnani, A. Marx like this. They have been writing with much more consistancy, and much more deep anaysis. One can differ with them, criticise them. But Ravi, a person who privides blunt arguments, with no reasoning (but claims to have reasoned) in the form of droppings(examples are his comments above), doesn't have any right(don't take it literally) to comment on them. I will stop with this.

11:39 PM  
Blogger ROSAVASANTH said...

http://andaiayal.blogspot.com/2006/05/blog-post_114788850616726652.html

//முற்பட்டவருக்கும் பிற மதத்தினருக்கும் சேர்ந்து பொருளாதார அடிப்படையில் சுமார் 10 % வரை ஒதுக்கு கொடுக்கப்பட்டால் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. //

அருள், நீங்கள் இப்படி எழுதியது மிகவும் ஆச்சரியமாக இருகிறது. இடவொதுக்கீடு என்பதற்கும் பொருளாதரா பிரச்ச்சனைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஏதோ எளியவர்களுக்கு வலியவர்கள் அளிக்கும் சலுகையாக பார்த்தால் இந்த வாதம் ஒத்து வரும். ஆனால் இடவொதுக்கீட்டின் அடிப்படை, இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளில் நிலவும், சாதிய சமூகத்தின் தடைகளை முன்வைத்து, சமன் செய்வதை அடிப்படையாய் கொண்டது. டிவிஎஸ் (வேறு உதாரணத்தையும் எடுத்துகொள்லலாம்) நொடிந்து போய் தெருவுக்கு வந்தால் இடவொதுக்கீட்டிற்கு தகுதியாகிவிடும் என்றால், அது கேலிக்குரியதாக இல்லையா?

ரவி இது போல சொன்ன போது எல்லாம் எதிர்வினை வைக்க தோன்றவில்லை. அவர் புரிதல் அப்படி. உங்களிடம் வேறு புரிதலை எதிர்பார்த்திருந்ததால் எழுதினேன். மற்றபடி இந்த விவாதத்தில் தீவிரமாய் ஈடுபடும் ஆர்வம் இல்லை. (முதல் இரண்டு வாதங்களை ஏற்றுக்கொள்கிறேன்.)

11:57 PM  
Blogger ROSAVASANTH said...

http://gragavan.blogspot.com/2006/05/blog-post_17.html

//கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா?//

கீமாயணத்தை பெரியார் எழுதியதாக உங்களுக்கு யார் சொன்னது? பெரியார் எழுதவில்லை. எனக்கு தெரிந்து அதை எழுதியவர் எம். ஆர். ராதா.

12:43 AM  
Blogger ROSAVASANTH said...

http://therthal2006.blogspot.com/2006/05/s.html


//He has been consistent in his vitroil/diatribe against the Dravidian Parties.... Also he had the courage to point out to the anti-dalit practices of Periyar too//

yes, prasanna, if you read his 'Dalits reversed' article, he is definitely consistent in his attack on Dravidian movement. Even Cho is consistent that way!

Apart from that, Anand is clear example of, journalism based on polemeics.

1:58 AM  
Blogger ROSAVASANTH said...

http://dalitpriest.blogspot.com/2006/05/blog-post_114849015775668916.html

ரவியிடம் பரந்த கருத்து, விரிவான வாசிப்பி என்று எந்த எழவும் கிடையாது. இதை ரொம்ப நாட்களாய் நான்சொல்லி வருகிறேன். அவர் ஜெயமோகன சுஜாதாவை திட்டுவதும் ஈகோ பிரச்சனையே அன்றி, கருத்துருவ தளத்தில் அல்ல. சரியாய் செரிக்காத வாயு பிரச்சனை போன்ற அவரது அறிவு, உங்களுக்கு வியப்பளிப்பதை பார்த்து பரிதாபமாய் இருக்கிறது.

தனது மூர்க்கத்தனம், அறிவு மொண்னைத்தனம் காரணமாகவும், அப்பட்டமான பார்பன ஜாதி வெறியராக உருவெடுத்துள்ளார். இணையத்தின் மற்ற பார்பன இந்துத்வ கொழுந்துகளுடன் கை சேர்க்கவும் அவர் தயங்கவில்லை. எனக்கு இப்படி அவரது முகமுடி உடைந்தது எல்லாமே ஒரு வகையில் மகிழ்ச்சிதான். அவரால் தமிழ் வலை சமூகத்திற்கு நல்லதை விட கெடுதலே நிகழ்ந்து வருவதாக நான் நினைக்கிறேன்.

12:36 AM  
Blogger ROSAVASANTH said...

http://holyox.blogspot.com/2006/06/102.html

கட்டுரைக்கான சில ரெஃபரன்ஸ் என்று சில சுட்டிகளை குறிப்பிடுவது உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. எனது 'பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்' பதிவில் உண்மை என்பதன் வேறு அணுகுமுறை பற்றி மெல்லியதாய் பேசியிருப்பேன். இன்னமும் பேசும் நோக்கம் உள்ளது. இந்த கட்டுரை தெளிவான மொழியில் எழுதப்பட்டுள்ளது.

எனக்கு என்ன குழப்பம் என்றால் இதை எழுதிய நீங்கள் சிம்புவையும் என்னையும் சேர்த்து எழுதிய அபத்த பதிவை( என்று நான் நினைப்பதை) எப்படி எழுதினீர்கள் என்பதுதான். எப்படி அபத்தம் என்று விளக்கம் கேட்டு மல்லுக்கு நிற்காதீர்கள். எனது சென்ற வார முதல் பதிவிலேயே, என் பதிவு எதிர்கொண்ட விதத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.ஒரிஜினல் பதிவிலேயே மிக தெளிவாக சொல்வதன் பொருள், அதன் சந்தர்ப்பம், மற்றும் தேவை பற்றி சொல்லி பதிந்திருக்கிறேன். உங்களின் பதிவை (எனக்கான எதிர்வினையை) நான் முழுவதும் படிக்கவில்லை. பாதிக்கு மேல் தாங்கமுடிவில்லை. இந்த வார பதிவுகளில் நீங்கள் காண்பிக்கும் முதிர்ச்சியை பார்த்து இதை ஏனோ சொல்லத் தோன்றியது. நன்றி!

4:05 AM  
Blogger ROSAVASANTH said...

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_27.html

//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//

தடித்த எழுத்துக்களில் காரணமாக தந்துள்ளீர்கள். சரி, இப்படி சொன்ன பெரியார், 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் பலதாரா மணம் உள்ளிட்ட பல 'ஒழுக்கக் கேடுகளுக்கு' சார்பாக எழுதியுள்ளாரே? ஆண்களுக்கு சொல்லப்படும் அத்தனையும் (பல தாரம், பலருடன் உறவு) பெண்களுக்கும் பொருந்தும் என்று முடித்திருப்பாரே? அதை எப்படி எடுத்துக் கொள்வது.

இந்த உரை ஒரு கூட்டத்தில், அதில் பங்குகொள்ளும் கேட்பவர்களை மனதில் வைத்து பேசியது. ஆனால் நூல் என்பது தன் கருத்துக்களை எந்த வாசக சமரசமுமின்றி எழுதப்படுவது. இதில் எதை பெரியாரின் பார்வையாக எடுத்துக் கொள்வது.

(பெரியாரின் பார்வை எதுவாக இருந்தாலும், நாம் அதை எப்படி எடுத்து கொள்வது, நமது பார்வையை எப்படி உருவாக்கி கொள்வது என்பது வேறு விஷயம்.)

1:45 AM  
Blogger ROSAVASANTH said...

http://kurangu.blogspot.com/2006/06/blog-post_27.html


பாலசிங்கம் மூலமான இந்த வாக்குமூலம் (அப்படியே ஊடக திரிபுகள் இல்லாமல் உண்மையாய் இருந்தாலும்) புலிகள் ஒப்புக்காக, எதிர்கால strategyயை முன்வைத்து வெளிபட்டது எனபதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உதவி புலிகளுக்கு தேவையில்லை, அதே நேரம் சிங்கள அரசுடனான உறவாடல், பொருளாதாரம் தொடங்கி ராணுவம் வரையிலான ஒத்துழைத்தல்கள், உதவிகளை இந்தியா நிறுத்தப் போவதில்லை என்றும் புலிகளுக்கு தெரியும். ஆனால் ஒரு - கடந்த யாழ்பாண முற்றுகை போன்ற- க்ளைமாக்ஸ் காட்சியில், இந்தியா மொத்த உடலையும் உள்நுழைக்கும் சாத்தியம் காரணமாகவே இப்படி சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதற்கு பலன் எதுவும் இல்லாவிட்டாலும்,பாதகம் இருக்கலாம். (உதாரணமாய் வீரப்பன் கோவாலுக்கு அளித்த சன் டீவியில் வந்த பேட்டியில், சில காட்டிலாக்கா அதிகாரிகளின் ஆட்டங்களை பற்றி விலாவாரியாய் சொல்லி, தான் அதில் ஒருவரை போட்டுத்தள்ளியவுடன் அங்கே ஆடுகளும் மக்களும் சந்தோஷமடைந்ததை பற்றி சொல்லியிருப்பார். அதை பார்த்த ஒரு போலிஸ் அதிகாரிக்கு வீரப்பன் விவரித்த சம்பவங்கள் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. கடைசியாய் போட்டு தள்ளியதாய் சொல்வதை ஒரு வாக்குமூல சாட்சியாக எடுத்துக் கொள்வதை பற்றி பேசியிருப்பார்.)


மற்றபடி இந்த பதிவு நல்லதொரு நகைச்சுவை என்றாலும் ரொம்ப யதார்த்தமானது.

உதாரணமாய் //இதில் நடக்க வேண்டிய முதல் அர்த்தமுள்ள நடவடிக்கை குற்றவாளிகளின் சரணடைதல். சட்டத்தின் முன் நிற்றல். அது நடக்காத வரையில் மன்னிப்புக் கோருவது என்பது உள்ளீடற்ற வெறும் வார்த்தைகளே.//

பிரபாகரன் சரணடைந்து இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனை பெற வேண்டுமா? பேஷ், அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்பது இருக்கட்டும். அதை ஒப்புகொள்ளும் நேர்மையாவது இருக்குமா என்று ஈழத்தமிழர்கள் கேட்பார்கள்.

ஈழம் கிடக்கட்டும், அது அன்னிய நாடு. காஷ்மீரில் இந்திய படைகள் ரொம்ப சாது என்றே வைத்துகொள்வோம். லஷ்கர் மட்டும்தான் எல்லோரையும் விதரணை இல்லாமல் மதவெறிகொண்டு கொன்று குவிக்கிறது என்றும் வைத்துகொள்வோம். வடகிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு, அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பிற்கு முன்பு மெல்லிய மன்னிப்பு கேட்கும் பண்பாவது இந்திய அரசிற்கு இருக்குமா? விசாரணை தண்டனை என்றெல்லாம் ஒரு வார்த்தையே இல்லை என்று வைத்து கொள்ளலாம்.

வடகிழக்கில் தீவிரவாதிகள் இருப்பதால் பிரசனையா? சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா? பிரபாகரன் மட்டும், ஏற்கனவே தனது ஆட்கள் கைது செய்யப்பட்டும், விசாரணை நடந்து 26 பேர்களுக்கு உளவியல் ரீதியாய் மரண தண்டனை அனுபவிக்க வைத்த பின்னும், வந்து சரண்டைந்து தண்டனை அனுபவிக்க வேண்டும். நல்லதொரு நியாயம்தான் உலகம் அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கிறது. பிரச்சனை என்னவெனில் புலிகளும் தங்களுக்கு அதே போன்ற ஒரு நியாயத்தை கையில் வைத்துக் கொண்டு இயங்குவார்கள்.

2:49 AM  
Blogger தமிழ் அகராதி said...

இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

11:06 PM  
Blogger சிவா சின்னப்பொடி said...

தமிழக மீனவர்கள் கடத்தலும் விடுதலையும்-சில கேள்விகள்…..

தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன.
தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது.

இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. காவல்துறையினர் தாங்கள் பெற்ற வாக்குமூலத்தை ஒரு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட்டது ஏன்? ஏன்ற சந்தேகம் பலமாக எழுந்தது.

இன்று நேற்றல்ல கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சிறீலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் அவர்களது படகுகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்வதும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் மீன்களை பறித்துச் செல்வதும் ஒரு தொடர் கதையாகவே நடந்துவந்திருக்கிறது-வருகிறது.
அண்மைக் காலங்களில் சிங்கள கடற்கொள்ளையர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறீலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் என்பனவும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்திகள் ஊடகங்களிலே வெளிவந்திருக்கின்றன.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தான் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் கடத்திச்சென்றார்கள் என்ற செய்தியை தமிழக அரசும் காவல்துறையும் அவசர அவசரமாக வெளிடும் போது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கும் தமிழகத்திலுள்ள அவர்களது ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கும் முயன்றுவரும் சிறீலங்கா கடற்படையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் எதிர்காலத்தில் தமிழக மீனவர்களை வகை தொகையின்றி சுட்டுக் கொன்றுவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழி போடுவதற்கான ஆபத்து இருக்கிறது என்பது ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் தெரியவில்லை? இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்து செயற்படும் பாகிஸ்த்தான் உளவுத்துறை சிறீலங்கா அரச ஆதரவு தமிழ் குழுக்கள் மற்றும் ஜிகாத் போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களை வைத்து தமிழகத்தில் பாரிய அழிவுகளை எற்படுத்திவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு தப்பித்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் என்ற எண்ணம் ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் வரவில்லை? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலும் பறவாயில்லை தமிழக மக்கள் (மீனவர்கள் உட்பட) வகைதொயின்றி கொல்லப்பட்டாலும் பறவாயில்லை விடுதலைப்புலிகளை; தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டவேண்டும் என்ற குறுகிய சிந்தனையும் தமிழர் விரோதப் போக்கும் தான் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டது.

இப்போது கடத்தப்பட்ட 12 மீனவர்களில் 11 பேர் மீண்டு வந்து விட்டார்கள்கள். அவர்களை சுயமாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க விடாமல் அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்துச் சென்று கியூபிராஞ் அலுவலகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் தாங்கள் சொல்வதைத் தான் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டது அந்த மீனவர்கள் வெளியிட்ட தகவல்களில் இருந்தே தெரிய வருகிறது.

இந்த மீனவர்கள் தங்களை கடத்திய விடுதலைப்புலிகள் முதலில் காட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் வீடொன்றில் தங்க வைத்ததாகவும் கூறுகிறார்கள்.தங்களது படகுக்காகவே விடுதலைப்புலிகள் தங்களை கடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

தாங்கள் தங்க வைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது படம் இருந்ததாகவும் அங்குள்ளவர்கள் புலிகளின் குரல் வானொலியை கேட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதிலே இரண்டு விடயங்கள் முரண்படகின்றன.இவர்கள் தங்க வைக்கப்பட்ட இடம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தால் அங்கே சிருடை அணிந்த போராளிகளின் நடமாட்டம் இருந்திருக்கும்.போராளிகளின் நினைவு வணக்க நிகழ்வுகள் உட்பட ஈழப்போராட்டம் சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகள் அங்கே நடந்திருக்கும் அதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி இவர்கள் சிறிதளவாவது அறிந்திருக்காமல் இருக்க முடியாது. தங்களை விடுதலைப்புலிகள் வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்ததாக இவர்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
அடுத்தது முழுமையான சிங்களப்புதியான காலி துறைமுகத்துக்கே சென்று தாக்குதல் நடத்தும் கடற்புலிகளுக்கு படகு தேவையென்றால் சிங்கள மீனவர்களின் படகுகளை அவர்களால் சுலபமாக கடத்தியிருக்க முடியுமே! தங்களது வழியில் குறுக்கிட்ட மீpனவர்களை கடற்புலிகள் தான் சுட்டார்கள் என்றால் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்திருக்க வேண்டுமே!
உண்மையில் சிறீலங்கா அரசுக்கும் இந்திய உளவத்துறைக்கும் நெருக்கமான தமிழ் ஆயுதக் குழு ஒன்றினால் தான் இந்த மீனவர்கள் கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
கடத்தப்பட்ட மீனவச் சிறுவன் அனிதன் மக்கள் தொலைக்காட்சிக்கு தெரிவித்தபடி கடத்தப்பட்ட மீனவர்கள் சிறீலங்கா கடற்படை படகுகளில் ஏற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டுத் தீவொன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
கடத்தப்பட்ட ஒரு மீனவர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதல் நடந்ததாகவும் தங்களை பங்கருக்குள் படுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் பலாலி விமானத் தளத்தின் மீது வான் தாக்குதல் நடத்திய பின்னர் சிறிலங்கா வான் படையினர் அரசகட்டுப்பாட்டிலுள்ள தீவகப் பகுதிகளின் கரையோரப்பகுதிகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியிருந்தது இங்கே குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

விடுதலைப்புலிகள் கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்து தங்களுக்கு ஐஸ்கீறிம் மற்றும் இனிப்புப்பண்டங்கள் வழங்கப்பட்டதாக ஒரு மீனவர் கூறியுள்ளார்.சிறீலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இவ்வாறு செய்தார்கள் என்பது கவனிக்கத் தக்க ஒன்றாகும்.

அடுத்து இந்த மீனவர்களுடன் கடத்தப்பட்டதாக கூறப்படும் கேரள மீனவர் அவரது படகுடன் திருப்பியபோது அவரது படகில் ஆயுதங்கள் இருந்ததால் மாலைதீவுக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது படகும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயம் மிகப் பெரிய சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.தமிழக மீனவர்கள் அவர்களது படகுடன் கடத்தப்பட்டது.மன்னார் வளை குடாவில்.அந்த மீனவர்களுடன் கடத்தப்பட்ட ஜோசப் என்ற கேரள மினவர் எதற்காக இந்து சமுத்திரத்திலுள்ள மாலை தீவுக்குச் செல்ல வேண்டும். அவர் மன்னார் வளை குடாவில் இருந்து தூத்துக்குடி கன்னியா குமரி கடற்பகுதி வழியாக கேரளத்துக்கு சென்றிருக்கலாமே?விடுதலைப்புலிகளுக்கு அவரது படகு தேவைப்பட்டிருந்தால்பாக்கு நீரணை வழியாகத் தானே அவர்கள் அதை எடுத்துச் சென்றிக்க வேண்டும்.அப்படி அந்தப்படகை அவர்கள் தங்கள் தேவைக்கப் பாவித்த பின்னர் விடுவித்தருந்தால் அந்தப் பாதையினுடாகத் தானே அவர்கள் விடுவித்திருப்பார்கள்.வங்கள விரி குடாவுக்கப் போய் இந்து சமுத்திரத்த்தில் இலங்கையை சுற்றிப் பயணித்து மாலை தீவைகடந்து கேரளாவுக்கு செல்வது என்பது புதிரானதாக இருக்கிறதே?

இந்தப்படகு மூழ்கடிக்கப்பட்டவுடன் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசு அவசர அசரமாக அறிவித்ததும் முதலில் அது விடுதலைப்புலிகள் தான் என்ற கூறிய மாலைதீவு அரசாங்கம் அதை மறுத்து கைது செய்யப்பட்டவர் மலையாளம் பேசுபவர் என்று கூறியதும் கவனிக்கத் தக்கது.

1989ம் அண்டு மாலைதிவு அரசை கவிழ்ப்பதற்கு இந்திய உளவத்துறையான ரோவால் அனுப்பப்பட்ட புளட் குழு மன்னார் முள்ளிக்குளத்திலிருந்தும் தூத்துக்குடி குறைமுகத்திலிருந்தும் சென்றதைப் போல் மாலைதீவில் ஏதோ ஒரு சதிநாச வேலையில் ஈடுபடுவதற்காக இந்தப் படகு குடா நாட்டு தீவுப் பகுதியல் இருந்து தூத்துக்குடி கன்னாகுமரி கடற்பரப்பினூடாக ஏன் மாலை தீவக்குச் சென்றிக்கக் கூடாது? அதற்கான தயாரிப்புக்காக இந்தப் படகும் அதிலிருந்த மீனவர்களும் ஏன் கடத்தப்பட்டிருக்க கூடாது? என்ற கேள்வி களுக்கு விடை காணப்பட்டால் இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் அப்பலத்துக்கு வரும்.

உண்மையில் தமிழகத்தையும் தமிழக மீனவர்களையும் பேரழிவில் இருந்த காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான அக்கறையுள்ள ஊடகங்கள் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவரும் தமிழர் விரோத போக்குடைய இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடைய கீழ்த்தரமான சதித் திட்டங்களை அம்பலப் படுத்துவதுடன் அதற்கெதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். விடுதலைப்புலிகளை தமிழக மக்களதும் இந்தியாவினதும் எதிரியாக சித்தரிக்க முனையும் இந்த தமிழர் விரோத சக்திகள் பௌத்த சிங்கள பேரினவானத்தை வளர்த்து விடுவதற்கு துணைபோகின்றன. இராணுவ மயமாகிவரும் பௌத்த சிங்கள பேரினவாதம் எப்போதும் இந்திய நலனுக்கு எதிரானது என்பதையும் இது தமிழகத்தற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் இருப்புக்கே அச்சுறத்தலாக அமையும் என்பதையும் தமிழக அரசும் இந்திய அரசும் இப்போது உணரத் தவறினால் வரலாறு அவர்களுக்கு கசப்பான பாடத்தை படிப்பிக்கும
http://sivasinnapodi1955.blogspot.com/2007/05/blog-post.html

3:07 PM  

Post a Comment

<< Home

Site Meter