கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Thursday, June 29, 2006

இதுதாண்டா விவாதம்!

மாதங்கள் முன்பு சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலெல்லைக்குள் நுழைந்து நடத்திய, இன்று வரை இந்திய அரசினால் சின்ன முணுமுணுப்பினால் கூட எதிர்கொள்ளப் படாத தாக்குதலை தொடர்ந்து நான் எழுதிய பதிவிற்கு வந்தியத்தேவன் முன்வைத்த எதிர்வினை பற்றி இப்படி தொடங்கியிருந்தேன்.

"மீனவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் (அல்லது இந்நாள் வரை தொடர்ந்து வரும் தாக்குதல்களால்) உந்தப் பெற்று, வந்திய தேவன் பதிவு எழுத வரவில்லை என்பது, வந்தியத்தேவன் உட்பட அவர் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும் வகையிலே, அவரது பதிவே எழுதப்பட்டுள்ளது. அவர் பதிலளிக்கும் விதத்திலிருந்தே தெளிவாக, இந்திய கடற்படை மற்றும் இந்திய தேசியம் பற்றி காட்டமாய் நான் எழுதியதற்கும், 'இந்திய குடிமகன்களை காக்க ஏன் இத்தனை பெரிய படைக்கு வக்கு இல்லை? கண்டதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் ஏன் இந்த பிரச்சனை குறித்து மௌனமாய் இருக்கிறார்கள்?' என்கிற விதத்தில் சில கேள்விகளை, தடித்த உடைகளை தாண்டி சிலருக்கு உள்ளே கொஞ்சம் உறைக்கும் வண்ணம், கேட்டதற்கு பதிலாகவே அவருடைய பதில் வந்துள்ளது. "

இவ்வாறு நான் எழுதியதை திரித்தல் என்றும் கயமைத்தனம் என்றும் அவர் சொல்லியிருந்தார். நான் குறிப்பிட்டபடி, எனக்கு எதிர்வினையாய்/இந்திய கடற்படைக்கு வக்காலத்து வாங்குவதாய் அல்லாமல், தமிழக மீனவர்கள் மீதான அக்கறையினால் மட்டுமே அவர் எழுதினார் என்பதை, அவர் பதிவில் கோவிந்தா பின்னூட்டங்கள் அளித்தவர்கள் கூட மனதளவில் நம்ப மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஒருவர் காயமும் அடைந்துள்ளார். கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை செய்தி சன் நியூஸ், என்டிடிவி, சிஎன்என் ஐபிஎன் வரை எல்லா செய்தி சேனல்களிலும் வாசிக்கப் பட்டது. ஒரு முழுநாள் எல்லா சேனல்களிலும் கீழே ஒரு வரி ஓடிக்கொண்டும் இருந்தது. கலைஞர் கூட்டம் போட்டு மைய அரசிற்கு இது குறித்து கோரிக்கையும் வைத்துள்ளார். (அதற்கு மேல் அவர் என்ன செய்யமுடியும்?) வழக்கம் போல இந்தியாவிடமிருந்த - குறிப்பாக எதிர்காலத்தில் இது நடக்காதிருக்க இலங்கை அரசிற்கு எச்சரிக்கை கலந்த செய்தியளிக்கும் - எந்த எதிர்வினையும் இல்லை. அது தெரிந்த விஷயம்தான், எதிர்பார்த்ததுதான்! தமிழக மீனவர்கள் மீது பாசம் வைத்திருக்கும், மீனவர்களின் பிரச்சனை குறித்த அத்தனை செய்திகளையும் டெஸ்க்டாப்பில் வைத்து 10 பதிவுகள் போட்ட, முன்னாள் கடற்படை வீரருக்கு அதை பற்றி எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் பதிவில் இந்தியாவை முன்வைத்து நான் ஒரு பின்னூட்டமிட்ட உடன், ஒரு வசைப்பதிவு எழுதும் obsessionஐ மட்டும் அடக்கி கொள்ள முடியவில்லை. (அவரது பதிவை படித்துவிட்டு இந்த பதிவை தொடரவும்.)

தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் மீன் பிடிப்பதில் இருக்கும் பிரச்சனையுடன், சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவதுடன் முடிச்சு போட்டு, மீனவர்கள் பிரசனையை ஏற்கனவே தீர்த்து வைத்து, அறிவாளிகளின் பாராட்டையும் பெற்றாகிவிட்டது. இப்போது ஈழப்பிரச்சனையிலும் கை வைக்க திட்டமிட்டு, இன்னும் பல பதிவுகள் எழுதப் போகிறாராம். இதையும் ஈழத்தமிழர்கள் மீதான மாளாத காதலால்தான் எழுதினார் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இதை அவரால் தீர்க்க இயலாத வகையில் பிரச்சனை குறித்து ஏகப்பட்ட பேர்கள் வண்டி வண்டியாய் ஏற்கனவே எழுதியுள்ளனர். அதை பற்றி எழுதுவதை விட, என்னிடம் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுதப் போய், வேறு விஷயங்கள் சேர்ந்து நீண்டு விட்டதால் இந்த பதிவு.

இறந்த கால சாட்சியங்கள் இத்தனை வைத்திருக்கும் வந்தியத்தேவனுக்கு பச்சையாய் திட்டத்தெரியும் என்பது கூட தெரியாமலா எழுத்தில் என் ஜீவனை வைத்திருக்கிறேன்! திட்டுவது மட்டுமல்ல, எனக்கு திட்டாமல் இருக்கவும் - குறிப்பாக வசைகள் மொத்தமாய் தாக்கும் போது மௌனமாய் இருக்கவும்- தெரியும் என்ற விஷயத்தை அவருக்கு புரிய வைக்க முடியுமா?

நான் புலிகளை ஆதரிக்கிறேனா எதிர்கிறேனா, 'சுற்றி வளைத்து தெருவடைக்க மார்'கழி'க் கோலமிடாமல், "இருபுள்ளி ஒரு கோடு' என்று பதில் சொல்ல வேண்டுமாம்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் என்று ஒன்று இருக்கிறதா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

வந்தியத்தேவன், என்னிடம் பதிலை பெற்று என்ன செய்ய உத்தேசம்? 'இரு புள்ளி ஒரு கோடு' என்று 'either with us or against us' என்று மட்டும் புரிந்து கொள்ளும் மொண்ணைத்தனம் உள்ள உங்கள் புத்திக்கு எதை சொல்லி நான் புரிய வைக்க முடியும்? என் நிலைபாடு தெளிவாக மீண்டும் மீண்டும் முன்வைக்கப் பட்டிருக்கிறது. என் எழுத்தை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு, உங்கள் குடைக்கு கீழே நின்றால் மட்டுமே என் புலி எதிர்ப்பு புலப்படும் என்ற அளவிற்கு தன் நிலைபாடு சார்ந்த வெறி கொண்டிருக்கும் போது, எதை முன்வைத்து மிகுந்த ஜனநாயக தன்மையை அனுமதிக்கும் என் போன்றவர்களால் விவாதிக்க முடியும்? (கெக்கே பிக்கேவென்று எதையாவது கிண்டலடிக்க வந்தியத்தேவனுக்கு வாய்ப்பு தருவதற்காகத்தான் இந்த வரியை எழுதுகிறேன்.)

இரு புள்ளிகளுக்கிடையில் என் நிலைபாட்டை விளக்க முடியாது, அதையும் வந்தியதேவன் போன்றவர்களிடம் விளக்கும் தேவையும், சாத்தியமும் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். என்றாலும் வந்தியதேவன் போன்றவர்கள் - இன்னும் அவர் பதிவை பாராட்டப் போகும் நண்பர்கள் மற்றும் சில மலப்புழுக்கள் - என்னை புலி ஆதரவாளனாகவே பார்த்தால் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. இங்கே மட்டுமல்ல இயல்பு வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் இப்படி நேரடியாக சொல்ல தயங்கியதும் இல்லை.

புலிகளின் நிபந்தனை அற்ற ஆதரவாளர்கள், தமிழ் தேசியவாதிகள் இன்ன பிற சந்தர்ப்பங்களில்தான் புலி பாசிசத்தை முன்வைத்து எதிர்வினை வைக்கவும் எதிர்க்கவும் வேண்டியுள்ளதே ஒழிய, இந்திய தேசிய வெறி பிடித்தலையும், கடற்படை வீரராகவே வாழும் எவரும் என்னை புலி ஆதரவாளனாய் பார்த்தால், மறுக்கும் அவசியம் அறிவுதளத்தில் எனக்கு இல்லை. இது என்னிடம் வந்தியத்தேவன் நேரடியாக கேள்விக்கு பதில்.

அடுத்து ஸ்ரீகாந்த் வாசித்துக் கொண்டது போல் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்கள், ராஜிவ் படுகொலை இரண்டையும் ஒப்பிட்டு எதையும் பேசுவது என் நோக்கமில்லை. ஒன்றை முன்வைத்து இன்னொன்றுக்கு தர்க்க நியாயம் அளிக்கவும் முயலவில்லை. பிரபாகரன் சரணடைந்து, விசாரணைக்கு உடபடுத்தப் பட்டால் மட்டுமே அர்த்தமுள்ளதாய் எதையும் பேசமுடியும் என்ற பொருள்பட அவர் சொன்னதற்கான எதிர்தர்க்கத்தை மட்டும் நான் வைத்தேன். அரசு என்ற அமைப்பு தன் தவறுகளை ஒப்புகொள்ளும் நேர்மையை கூட காட்டாது. மன்னிப்பு, விசாரணை, குற்றத்திற்கான பிராயசித்தம் (அரசை தண்டிக்கவா முடியும்) என்பதெற்கெல்லாம் அதற்கு பிறகுதான் அர்த்தம் ஏற்பட முடியும். வரிசையான பட்டியல்களின் இறுதியில் ஒரு ஆயுதமும், அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான ஒரு தாக்குதலுக்கு கூட அரசு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்காத போது, ஒரு இணை அரசை நடத்திகொண்டிருக்கும் பிரபாகரன் விசாரணைக்கு உட்படவேண்டும் என்று சொல்வதன் அபத்தம் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். (நாட்டில் துப்பாக்கி சூடு நடந்தால், யாராவது அரசியல்வாதி வருத்தப்பட்டு அறிக்கைவிடத்தான் செய்வார். அப்படி எதையாவது எடுத்து போட்டு யாராவது பதில் சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். அந்த அளவிற்கு விவஸ்தை கெடவில்லை என்று சமாதானப்பட்ட போது வந்தியதேவனின் பதிவு (அதுவும் கடைசி பத்தி) பார்க்க கிடைத்தது.)

புலிகள் எந்த அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு ஈடு கொடுத்தாலும், மேலாதிக்கம் பெற்றாலும், இந்தியாவின் ஆமோதிப்பும் அங்கிகரிப்பும் இல்லாமல் குறிப்பிடத் தகுந்த மாற்றம் -அதாவது ஈழம் அமைவது அல்லது அதற்கு சற்று குறைவானது - எதுவும் நடக்க வாய்ப்பில்லை. சரியாக சொல்ல வேண்டுமானால் அமேரிக்காவின் ஆமோதிப்பு இல்லாமலும் எதுவும் நடக்க வாய்ப்பில்லைதான் என்றாலும், இந்தியாவின் ஆமோதிப்பு இன்னும் முக்கியமானது. தலையிட மாட்டோம் என்று சொல்லி கொண்டு, நடுநிலை வகிப்பதாய் காட்டி கொண்டே சிங்கள் அரசிற்கு மட்டும் எல்லா ஒத்துழைப்பையும் கொடுத்தாலும் -கடந்த யாழ்பாண முற்றுகை போன்ற -க்ளைமாக்ஸ் காட்சியில் இந்தியா உண்மையிலேயே சும்மா இருக்காது என்பதுதான் பலருக்கும் இருக்கும் புரிதல். இந்த பிரச்சனையினாலேயே புலிகள் இப்படி சால்ஜாப்பாகவாவது பேச வேண்டியுள்ளது என்பதையே நான் குறிப்பிட்டேன். மற்றபடி இந்த 'மன்னிப்பு கேட்டலை' போலியானதாக, உளமாற எதுவும் இல்லாததாகவே நானும் பார்க்கிறேன்.

ஆனால் எனது பின்னூட்டம் ஒரு சிக்கலான பிரச்சனையில், நாம் எவ்வளவு தூரம் வறலாற்று சம்பவங்களுக்கு விசாரணை, ஒப்புதல் வாக்குமூலம் என்பதை எல்லாம் வைத்து அணுக முடியும் என்பதை பற்றியது. இந்த பிரச்சனையை (வந்தியதேவனை மட்டும் முன்வைத்து சொல்லவில்லை, பொதுவாய் நடக்கும் எல்லா விவாதத்தையும் வைத்து சொல்கிறேன்) பற்றி விவாதிக்கும் சூழல் இருப்பதாக தெரியவில்லை. தென்னாப்பிரிகாவில், ஒரு வழியாய் தீர்வு போன்ற ஒரு திருப்பு முனை அமைந்த பின், Apartheid இன் போது நடந்த குற்றங்களின் ஞாபகங்களை என்ன செய்வது என்ற கேள்வி இருந்தது. எல்லாவற்றையும் தண்டிக்க வேண்டுமெனில் மக்கள் தொகையில் (கருப்பு வெள்ளை இரு தரப்பாரிலும்) ஒரு பெரிய சதவிகிதத்தினருக்கு மரண தண்டனைதான் விதிக்க வேண்டி வரும். அதே நேரம் பொத்த்தாம் பொதுவாக அதை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது. அதனால் மக்களின் மன வடிகாலுக்காக ஒரு தோற்ற விசாரணை நடைபெற்று ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தாங்களாகவே முன்வந்து மன்னிக்க வேண்டிய தீர்வை மேற்கொள்ள வேண்டிவந்தது. (வெள்ளை இனத்தின் இன்னொரு கயமைத்தனமான நாடகம் என்று இதை சொல்பவர்களும் உண்டு.) கிட்டதட்ட அதே நிலமையில்தான் ஈழமும் உள்ளது. பிரச்சனையின் உள்ளே மாட்டியிருப்பவர்கள் மட்டுமின்றி, வெளியே இருப்பவர்களும் எந்த தீர்வையும் நோக்கி நகரவிடமாட்டார்கள் என்பதற்கு இன்று ஒலித்துவரும் எல்லா குரல்களும் சிறந்த எடுத்துக் காட்டுக்கள்.

சரி, இதையெல்லாம் ஒரு அர்த்தமுள்ள விவாதத்தில் பேசுவோம். இப்போது பலரால் பெரிதாய் சிலாகிக்கப் பட்ட வந்தியத்தேவனின் தர்க்கத்திற்கு சாம்பிளாய் அவரது பதிவில் இருந்து..

//1200 இந்திய அமைதிப்படையினர் இலங்கை மண்ணிலே மாண்டனரே... அதற்காகவா அண்டன் பாலசிங்கம் புலிகள் சார்பாக மன்னிப்புக் கோரினார்? அப்படியென்றால் இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த (ஏகோபித்த தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணுவது போல, எழுதுவது போல) அட்டூழியங்களுக்காக இந்தியப் பிரதமரை மன்னிப்புக் கூற கோரலாம். ஆனால் நடந்ததாய் சொல்லி இன்று நடப்பதென்ன?//

என்ன ஒரு அறிவுபூர்வமான தர்க்கம்! அமைதிப்படையினரால் உயிரிழக்க நேர்ந்த புலிகளின் மரணம் பற்றி பேசும் போது, அதே போரில் மாண்ட இந்திய வீரர்களின் மரணத்தை பற்றி பதிலுக்கு பேசினால், அது தர்க்கம். அமைதி படையினரால் பாதிக்கபட்ட அப்பாவி மக்கள் பற்றி பேசும் போது, புலிகளுடனான போரில் மாண்ட ராணுவ வீரர்கள் பற்றி பேசுவதை குதர்க்கம் என்று கூட சொல்ல முடியாது. குதர்க்கம் என்பது நேரடி தர்க்கத்தவிட இன்னும் அற்புதமான டெக்னிக்.

அடுத்து //ஜப்பான் அன்றைய உலக யுத்தத்தில் ஏனைய நாடுகள் மேல் செய்த அராஜகத்துக்கு இன்றைக்கு மன்னிப்பு கேட்கின்றது.

ஆனால் இந்தியாவோ "அமைதி"ப்படையை இலங்கைக்கு அனுப்பியது. அங்கே யுத்தம் செய்யவா அனுப்பினார்கள்?//

நான் எழுதியதுடன் என்ன தொடர்போ, என்ன எழவு அர்த்தமோ! வாசித்து அக்கறை உள்ளவர்கள் எனக்கு பின்னூட்டத்தில் விளக்கவும்.

கடைசி பத்திகளில்தான் எங்கேயோ போய்விட்டார். மீனவர்கள் பிரச்சனையில் கடற்படையின் பிரதிநிதியாய் மாறி, அவர்களின் செயலற்ற தன்மைக்கு மாறி மாறி விளக்கம் கொடுத்தவர், இப்போது மொத்த இந்தியாவிற்கே பிரதிநிதியாகிவிட்டார்.

//சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா?

"ஆஹா கேட்போம் கேட்போம் கேட்போம்... ஹலோ என்ன "Regret" என்று பல வருடங்கள் கழித்து வலிநிவாரணி விளம்பரம் போல் 'போயே போச்சு'... 'போயிந்தே'... 'It's Gone'. சொல்வோம் சொல்வோம் சொல்வோம்...ஆனால் என்ன செய்வது "மறக்கவோ மன்னிக்கவோ முடியாது" என்று கவிதை பாடுவார் சிலர்... சில (வோல்கார்) அமைப்புகள்...//

என்ன தர்க்கம், என்ன அறிவு! இந்த லட்சணத்தில் என் தர்க்கத்தை பற்றி இணையம் அறியுமாம்! இணையமா? உலகமே அறியும்! இப்போது கொஞ்சம் தெரியும், எதிர்காலத்தில் இன்னும் விவரமாக அறியும். இப்படி எழுதுவது திமிராக தோற்றமளிக்கலாம். ஆனால் அதிகாரத்திடமும், கீழ்மையிடமும் கொள்ள வேண்டிய ஆணவம் பற்றி ஜெயகாந்தனும், ஜெயமோகனும் சொன்ன விஷயங்களில் எனக்கும் ஒப்புதல் உண்டு. (குண்டக்க மண்டக்க கேள்விகளை இப்போது கேளுங்கப்பா!)

10 Comments:

Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்தின் பதிவு மற்றும் என் பின்னூட்டம்

http://kurangu.blogspot.com/2006/06/blog-post_27.html

பாலசிங்கம் மூலமான இந்த வாக்குமூலம் (அப்படியே ஊடக திரிபுகள் இல்லாமல் உண்மையாய் இருந்தாலும்) புலிகள் ஒப்புக்காக, எதிர்கால strategyயை முன்வைத்து வெளிபட்டது எனபதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உதவி புலிகளுக்கு தேவையில்லை, அதே நேரம் சிங்கள அரசுடனான உறவாடல், பொருளாதாரம் தொடங்கி ராணுவம் வரையிலான ஒத்துழைத்தல்கள், உதவிகளை இந்தியா நிறுத்தப் போவதில்லை என்றும் புலிகளுக்கு தெரியும். ஆனால் ஒரு - கடந்த யாழ்பாண முற்றுகை போன்ற- க்ளைமாக்ஸ் காட்சியில், இந்தியா மொத்த உடலையும் உள்நுழைக்கும் சாத்தியம் காரணமாகவே இப்படி சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதற்கு பலன் எதுவும் இல்லாவிட்டாலும்,பாதகம் இருக்கலாம். (உதாரணமாய் வீரப்பன் கோவாலுக்கு அளித்த சன் டீவியில் வந்த பேட்டியில், சில காட்டிலாக்கா அதிகாரிகளின் ஆட்டங்களை பற்றி விலாவாரியாய் சொல்லி, தான் அதில் ஒருவரை போட்டுத்தள்ளியவுடன் அங்கே ஆடுகளும் மக்களும் சந்தோஷமடைந்ததை பற்றி சொல்லியிருப்பார். அதை பார்த்த ஒரு போலிஸ் அதிகாரிக்கு வீரப்பன் விவரித்த சம்பவங்கள் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. கடைசியாய் போட்டு தள்ளியதாய் சொல்வதை ஒரு வாக்குமூல சாட்சியாக எடுத்துக் கொள்வதை பற்றி பேசியிருப்பார்.)


மற்றபடி இந்த பதிவு நல்லதொரு நகைச்சுவை என்றாலும் ரொம்ப யதார்த்தமானது.

உதாரணமாய் //இதில் நடக்க வேண்டிய முதல் அர்த்தமுள்ள நடவடிக்கை குற்றவாளிகளின் சரணடைதல். சட்டத்தின் முன் நிற்றல். அது நடக்காத வரையில் மன்னிப்புக் கோருவது என்பது உள்ளீடற்ற வெறும் வார்த்தைகளே.//

பிரபாகரன் சரணடைந்து இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனை பெற வேண்டுமா? பேஷ், அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்பது இருக்கட்டும். அதை ஒப்புகொள்ளும் நேர்மையாவது இருக்குமா என்று ஈழத்தமிழர்கள் கேட்பார்கள்.

ஈழம் கிடக்கட்டும், அது அன்னிய நாடு. காஷ்மீரில் இந்திய படைகள் ரொம்ப சாது என்றே வைத்துகொள்வோம். லஷ்கர் மட்டும்தான் எல்லோரையும் விதரணை இல்லாமல் மதவெறிகொண்டு கொன்று குவிக்கிறது என்றும் வைத்துகொள்வோம். வடகிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு, அதற்கு எதிரான மக்கள் எதிர்ப்பிற்கு முன்பு மெல்லிய மன்னிப்பு கேட்கும் பண்பாவது இந்திய அரசிற்கு இருக்குமா? விசாரணை தண்டனை என்றெல்லாம் ஒரு வார்த்தையே இல்லை என்று வைத்து கொள்ளலாம்.

வடகிழக்கில் தீவிரவாதிகள் இருப்பதால் பிரசனையா? சரி, கேரளாவில், கலிங்கா நகரில், கங்காவரத்தில் கொல்லப்பட்ட எந்த ஆயுதமும் அதிகாரமும் இல்லாத ஆதிவாசிகள் மீதான கொலைக்கு அரசின் ஏதாவது பிரதிநிதி மன்னிப்ப்பு கேட்பாரா? பிரபாகரன் மட்டும், ஏற்கனவே தனது ஆட்கள் கைது செய்யப்பட்டும், விசாரணை நடந்து 26 பேர்களுக்கு உளவியல் ரீதியாய் மரண தண்டனை அனுபவிக்க வைத்த பின்னும், வந்து சரண்டைந்து தண்டனை அனுபவிக்க வேண்டும். நல்லதொரு நியாயம்தான் உலகம் அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கிறது. பிரச்சனை என்னவெனில் புலிகளும் தங்களுக்கு அதே போன்ற ஒரு நியாயத்தை கையில் வைத்துக் கொண்டு இயங்குவார்கள்

4:30 AM  
Blogger Srikanth Meenakshi said...

//பிரபாகரன் சரணடைந்து, விசாரணைக்கு உடபடுத்தப் பட்டால் மட்டுமே அர்த்தமுள்ளதாய் எதையும் பேசமுடியும் என்ற பொருள்பட அவர் சொன்னதற்கான எதிர்தர்க்கத்தை மட்டும் நான் வைத்தேன். //

வசந்த், உங்கள் எதிர்தர்க்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றே நினைக்கிறேன். புலிகளின் தலைமையால் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு படுகொலையையும், இந்திய ராணுவத்தினால் முறைகேடாக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும் ஒப்பிட முடியாது (அதாவது ராஜீவ் 'போய் அட்டூழியம் செய்து வாருங்கள்' என்று அனுப்பவில்லை). பிரபாகரன் சரணடைவதையும் இந்திய ராணுவ வீரர்கள் (சிலர்) சரணடைவதையும் ஒப்பிடலாமே ஒழிய, இந்திய அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கோரினாலேயே அதைப் பற்றிப் பேச முடியும் என்ற முறையில் ஒப்புமைப்படுத்திப் பேசுவது சரியாகத் தெரியவில்லை.

5:04 AM  
Blogger இளங்கோ-டிசே said...

அடடா....என்ன ஒரு கருத்து...சிறிகாந்தின் பின்னூட்டம் புல்லரிக்க வைக்கிறது. அண்மையில் ம்கிந்த ராஜபக்ஷா, எனக்கு புலியாலையும் அடி விழுது இராணுவத்தாலையும் அடி விழுது...புலிகள் தாக்குதலை நிறுத்தினால் நான் இராணுவத்தினரிடம் கெஞ்சிக் கேட்டு தாக்குதலை நிறுத்தச் சொல்கின்றேன் என்று உதயன் பத்திரிகை மூலமாக புலிகளிடம் தூதுவிட்டாராம். அப்போது பாலசிங்கத்தார் கேட்டிருக்கின்றார், முப்படைகளுக்கும் பொறுப்பாக இருக்கும் மகிந்தாவே இப்படி இராணுவம் தன் கட்டுப்பாட்டில் இல்லையென்று கூறுவதே சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கிறது என்று.

/ராஜீவ் 'போய் அட்டூழியம் செய்து வாருங்கள்' என்று அனுப்பவில்லை). /
அப்படித்தான் பிரபாகரனும் பொட்டம்மானும், கொஞ்சப்பேரை தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா சென்று வாருங்கள் என்று அனுப்ப, அதற்கு முன்னர் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட பெண்தான் தற்கொலை குண்டுதாரியானார் என்று ஒரு 'அறிவுஜீவிதனமான' விவாத்தை முன் வைக்க முடியாதா என்ன? ஆக்க்குறைந்தது, அதிகாரத்தின் உயர்பீடங்களில் இருப்பவர்களை புனிதமாக்க,வீணாய் பலிக்கடாக்கப்பட்ட சாதாரண இராணுவ வீரர்களை அவமதிக்காமல் இருக்காவது முயற்சி செய்யுங்கள்.

5:47 AM  
Blogger ஜூலியன் said...

The handling of the riots in Gujarat bears a disturbing resemblance to police and state behaviour in previous communal riots. On Oct. 31, 1984, armed mobs fell upon Delhi's Sikh community following Prime Minister Indira Gandhi's assassination by her Sikh bodyguards. The attacks began the same day. However, the army was called out only on the next evening. In its reply to a commission of inquiry, the army claimed that the government took too long to issue deployment orders. The army affidavit also stated that it was deployed in the less-affected southern and central districts of Delhi. The government, for its part, placed the onus on the army. A (now infamous) statement of the slain prime minister's son, Rajiv Gandhi, encapsulated the pervasive attitude within the government: "When a banyan tree falls, the earth is bound to tremble."

8:55 AM  
Blogger இளங்கோ-டிசே said...

“ஈழ விடுதலைப்போரில் 60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் தெரியும். மற்றும் அது சர்வதேச பிரச்சனையாகவும் உள்ளது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் ஐம்மு - காஷ்மீரில் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை நம் அண்டை மாநிலங்களுக்குக் கூடத் தெரியாமல் அரசு மூடி மறைக்கிறது. ராணுவம், எல்லைப் பாதுகாப்புப்படை, ராணுவ உளவுப்படை, போலீஸ், போலீஸ் உளவுப் பிரிவு, போலீஸ் ஆயுதப்படை இப்படி 8விதமான இந்திய அரசின் அனைத்து பாதுக்காப்புப் படைகளும் மக்களை வாழவிடாமல் 24 மணிநேர கண்காணிப்புக்கு உட்படுத்துகின்றன. காஷ்மீரில் மக்கள் தொகையைவிட அரசு படையினர் அதிகம். தீவிரவாதிகளை கொல்கிறேன் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை இவர்கள் கொன்று குவிக்கிறார்கள்.” என அரசால் மறைக்கப்பட்ட உண்மைகளை அஜிஸ் ஹூசைனும் பி.ஜி. ரசூலும் அரங்கில் பகிர்ந்து கொண்டனர்.



மேலே வசந்த எழுதிய விடயங்களோடு தொடர்புடையது என்பதாலும், இதற்கு முன் வசந்த எழுதிய அருந்ததி ரோய் சம்ப்ந்தமான கட்டுரைக்கும் ஒரு தரவாய் இருக்கும் என்பதால்...விரும்பியவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.

குறிப்பு வசந்துக்கு: இந்தப்பதிவுக்கு அவசிய்மில்லையெனின் இப்பின்னூட்டத்தை அகற்றிவிடவும். நன்றி.

11:20 AM  
Blogger Srikanth Meenakshi said...

சங்கர் இங்களித்திருக்கும் பின்னூட்டத்தை எனது பதிவிலும் இட்டிருந்தார். அங்கு அதற்கு பதிலளித்திருக்கிறேன். சுட்டி இங்கே

6:05 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்தளித்த அனைவருக்கும் நன்றி. இது குறித்த விவாதம் தொடர்வதை ஆரோக்கியமானதாய் பார்கிறேன். குண்டக்க மண்டக்க தர்கத்தை போட்டு, புஷ்தனமாய் ஒரு நிலைபாட்டை வைத்து பதிவு போடுவதாக நான் நினைக்கும் வந்தியதேவனின் பதிவில் கூட எதாவது புதிய விவரங்கள் கிடைக்கலாம் என்றே நினைக்கிறேன்.

என் பதிவில் சில பிழைகள் இருக்கின்றன. ஸ்ரீகாந்த் பதிவில் இடப்பட்ட என் பின்னூட்டத்தினால் உந்தப்பட்டு வந்தியதேவன் பதிவு போட்டதாக எழுதியது தவறு. பலரது கருத்தினால் உந்தப்பட்டே அவர் பதிவு போட்டார், நான் மட்டும் காரணம் அல்ல. ஆனால் நான் சுட்ட விரும்பியது பதிவு போடுவதற்கு பின்னுள்ள அவரது அரசியல் கரிசனம் யார் சார்பானது என்பதை. அவர் ஈழத் தமிழர் மேலான அக்கறையினால்தான் எழுதுகிறார் என்றால் அது எவ்வளவு நகைப்பிற்குரியதோ, அதே அளவு அவர் தனது முந்தய பத்து பதிவுகளை தமிழக மீனவர்கள் சார்பாக எழுதினார் என்று சொல்லிக் கொள்வது. மற்றபடி அவரது குண்டக்க மண்டக்க தர்க்கம், அதை பாரட்டும் கூட்டத்தின் அரசியல் புதிதானது அல்ல. மீனவர் பிரச்சனையை ட்ராலரின் ஆரம்பித்தது போல், இலங்கை பிரச்சனையை அமேரிக்கா பயன்படுத்திய போர்விமானங்களில் தொடங்கியுள்ளார். ஒட்டு போடுவது அவருக்கு பெரிய விஷயமா!

இந்த என் பதிவின் முக்கிய நோக்கம் ஸ்ரீகாந்த் பதிவில் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி. 'ஒரு சிக்கலான பிரச்சனையில், நாம் எவ்வளவு தூரம் வறலாற்று சம்பவங்களுக்கு விசாரணை, ஒப்புதல் வாக்குமூலம் என்பதை எல்லாம் வைத்து அணுக முடியும் என்பதை பற்றியது.'இது பற்றிய விவாதம் அர்த்தமுள்ளதாய் தொடர்ந்தால் தீவிரமாய் கலந்து கொள்ளும் ஆர்வம் நிச்சயம் உண்டு.

இன்னும் ஒரு விஷயம், ஸ்ரீகாந்த் பதிவில் என் பின்னூட்டத்தை வந்தியத்தேவனும் இன்னும் சிலரும் சரியாக வாசிக்கவில்லை. திட்டுவதற்கும், முத்திரை குத்துவதற்கும், திரிப்பதற்கும் ஒரு அழகான வாய்ப்பு ஒன்று தவறவிடப் பட்டிருக்கிறது. கூர்ந்து வாசித்தால் சிக்கக் கூடும்.

11:51 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி, ஆனால் எதுக்கு ரெண்டு இடத்தில போஸ்டர்?

2:22 AM  
Blogger ROSAVASANTH said...

http://karthikraamas.net/pathivu/?p=149

//சிலருக்கு நான் இந்த்துவத்தினை,
சோவை விமர்சித்தால் இனிக்கிறது, இட ஒதுக்கீட்டினை விமர்சித்தால்
கசக்கிறது.//

இந்த மாதிரி ஏதாவது வசனம் விடுவான்ர்னுதான், ரவி இந்துத்வாவை விமரசிப்பதாய் விடும் ஜோக்குகளை சீரியசாய் எடுக்க வேண்டாம் என்று ரொம்ப காலமாய் சொல்லி வருகிறேன். யாராவது கேட்டால்தானே! இவர் திண்ணையில் ஜெயமோகனுடனும், அரவிந்தன் நீலகண்டனுடனும் போட்ட சண்டைகளை படித்து பாருங்கள். சில்லு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்ததுடன், அரவிந்தன் ஜெயமோகன் போன்றவர்களின் வாதங்கள் வெற்றிபெறவும், ஒருவகையில் அவர்களுக்கு லாபம் அளிக்கும் வகையிலேயே இவரது செயல்பாடுகள் அமைந்தன என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த லட்சணத்தில் தான் இந்துத்வாவை எதிர்த்தாதாக ஒரு தம்பட்டம். எந்த கொடுமைக்கு தலையில் அடித்து கொள்வது என்று தெரியவில்லை.

2:22 AM  
Blogger ROSAVASANTH said...

http://tamilpukkal.blogspot.com/2006/07/17051931.html#comments
பெரியார் எழுதிய 'ஆத்மாவை பற்றி ஒரு ஆராய்ச்சி' என்ற கட்டுரையுடன் இந்த கட்டுரை சேர்ந்து வாசிக்க தக்கது.

படிக்க தந்ததற்கு நன்றி.

4:27 AM  

Post a Comment

<< Home

Site Meter