கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Monday, March 27, 2006

'வேதம் பற்றி' பின்னூட்டங்கள்!

இந்த வலைப்பதிவின் பின்னூட்டங்கள் பற்றிய தகவல், தமிழ்மணத்தில் வருவதில்லை. அதனால் சென்ற பதிவில் வந்த பின்னூட்டங்களில், விவாதத்திற்குரியதாய், என் பார்வையில் தெரிவதை, இங்கே தொகுக்கிறேன். எனது கருத்துக்கள் மிக மேலோட்டமாய் இருப்பதாலும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தேவை இருப்பதாலும், இப்போது சொல்ல உருப்படியாய் எதுவும் இல்லை. பின்னர் கணக்கில் கொள்ளும் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது, முற்றிலும் என் தனிப்பட்ட தேர்வு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. முழுமையாய் படிக்க சென்ற பதிவின் பின்னூட்டங்களை பார்க்கவும். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி.


Geetha Sambasivam: Without knowing Sanskrit you cannot understand Vedas and their correct meanings. For one word there are so many meanings. The hidden meaning is not known by you or me unless we are sanscrit scholars.

paarvai: வேதம் பற்றி எதுவுமே தெரியாது,அதனால் என் வாழ்க்கையில் நான் தடம் புரளவில்லை. ஆனாலும் ஆர்வமிகுதியால் ,ஏதோதெல்லாம் சொல்லியிருக்காமே ,அது என்னனுன்னு நாமும் அறிவோமே என்று யாராவது அது பற்றி எழுதினால் படிக்கும் பழக்கம் உண்டு. அவ்வகையின் துக்ளக் சோ; நக்கீரனில் ஒரு வைஸ்ணவ ஆச்சாரியார், இப்போ சாரு நிவேதிதா இவர்கள் ஓரளவுக்கு என் சிற்றறிவுக்குப் புரியும் படி எழுதுகிறார்கள். அதனல் படித்தேன். அந்த வைஸ்ணவ ஆச்சாரியார்; பிராமணராக இருந்த பொழுதும்;வேதங்கள் பற்றி பெரிய அபிப்பிராயம் உள்ளவர் போல் எழுத்தில், தெரியவில்லை.அதே சமயம் தன் கருத்துக்களை ,சொல்லும் விதம்;அவர் புலமையைப் புடம் போட்டுக்காட்டுகிறது.சங்கரராமன் போல் அவரை இதுவரை போட்டுத்தள்ளாமல் விட்டுவைத்துள்ளதே, எனக்கு பெரிய ஆச்சரியம்.

தங்கமணி: வசந்த்:நானும் இராகுல சாங்கிருத்தியாயன் எழுதியவற்றில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர ஆங்காங்கே படித்தது கொஞ்சம். வேதத்தைப் பற்றி பேசும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவையாக சில தோன்றுகிறது.

1. உபநிடத்தையும் வேதங்களையும் ஒரே அடைப்புக்குறிக்குள் போட முடியாது. நான் பல உபநிடதங்களைப் படித்தவரையில் அவற்றுள் பல அற்புதமானவை. உண்மையான ஞானத்தேடலும், அபரிமிதமான நுட்பமும் கொண்டவை. அதன் பொருட்செறிவு, தத்துவம் குறித்து அறிவாய் சேகரிப்பதைவிட (ஆனால் பலர் இதையே செய்யமுனைகின்றனர்) ஏற்கனவே அறிந்திருப்பதைக் கட்டுடைக்க, உதிர்க்க உபநிடதங்களின் பல பயன்படும்.

2. உபநிடதங்களின் விளக்க உரைகளுடன் கூடிய மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் உதவாதவை. நான் நேரடியான ஒவ்வொரு சொல்லுக்கான மொழிபெயர்பையும் கொண்ட உரைகளில் இருந்து என்னுடைய புரிதலைப் பெறுவதை விரும்புவேன். பல இடங்களில் சொற்கள் பின்னாளைய சமயச் சார்புகள், கண்ணோட்டங்களில் புரண்டெழுந்து வந்தவையாக இருப்பதால் அதைக்கூட கவனமாக கண்டுகொள்ள கொஞ்சமேனும் சம்ஸ்கிருத அறிவும், சொந்த அனுபவமும் அவசியம். (கர்மா என்பதை செயல் என்று சாதரணமாக பெயர்க்க மட்டார்கள், அதனோடு கூடிய அத்தனை சமயச் சாயத்திலும் புரட்டி உரை எழுதி இருப்பது சாதரணமாக நடகும் விபத்து) பாராயணம் தான் நோக்கமெனில் இது எதுவும் தேவையில்லை.(- உபரியான தகவல், கண்ணனின் பதிவில் http://emadal.blogspot.com/2006/03/blog-post_22.html திருலோக சீத்தாராம் பற்றிய மோகனraங்கனின் ஒலிப்பதிவு ஒன்று இருக்கிறது. நேரங்கிடைக்கும் போது கேட்கவும். சொற்கள்/ கவிதகள் குறித்த அவரது அணுகுமுறை நான் பலகாலமாக பின்பற்றி வருவது. அது மிகச்சரியானதும், பயனளிக்கக்கூடியதும் என்பது என் அனுபவம்.)

3. வேதங்கள் என்ற வகையில் சாரு குறிப்பிடுகிற மாதிரி பல இடங்கள்ல் நல்ல கவிதை உள்ளன. சில கவிதைகளை நான் படித்து மகிழ்ந்துள்ளேன்.

4. சாரு குறிப்பிடுகிற மாதிரியான வசைகள், அச்சங்களினால் விளைந்த வேண்டல்கள் மிகுதியாக இருப்பதாய் நானும் அறிந்தவரையில் நினைக்கிறேன். அப்படித்தான் இருக்கமுடியும் என்பதற்கு , கர்மகாண்டங்களின் நோக்கத்தைப் பார்த்தாலும் புரிந்துகொள்ளமுடியும். உபநிடதங்கள் இதனின்று பிரிந்து கிளைத்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

5. வேத பாராயணம் செய்தவர்கள், செய்கிறவர்கள் எல்லோரும் வேதத்தை ஆராய்ந்தவர்கள் கிடையாது. பலர் தொழிலுக்காகச் செய்வது.

6. ஆனால் காலங்காலமாக வேதத்தின் பெயரால் பல மோசடிகள் செய்யபப்டுகிறது; அதற்காக அது கேள்வி எழுப்பமுடியாத உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.இன்றைக்கு சாதாரண கணக்கு முதல் சட்டினி/ துவையல் வரை வேதக்கலர் கொடுக்க, சம்பாதிக்க எந்த வேதத்தையும் படித்திருக்க வேண்டாம். எவரும் கேள்வி கேட்காமல் (வேதத்தைப் புறக்கணிக்கிறேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுபவர்கள் கூட) ஒத்துக்கொள்வார்கள். :)

7. இப்படி ஒத்துக்கொள்பவர்கள் தான் காலங்காலமாக வேதத்தை யாரும் குறை சொல்லாமல் பார்த்துகொள்கிறவர்கள் என்பதும், அதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்பவர்களுமாக இருப்பது ஒரு சுவையான விதயம். :)

என்னுடைய பதிவை ( வேதத்தில் சாதி...) நீங்கள் படிக்கவேண்டும். புருஷ சூக்தத்தில் சாதி பற்றிய (வருணாசிரமம்) பற்றிய முதல் அறிவுறுத்தல் இருப்பது பலர் அறிந்ததே., ஆனால் 'பெரியவா' ஆடுதுறையில் நள்ளிரவில் வருணாசிரமத்தை சுதந்திர இந்தியாவில் சட்டப்பூர்வமாக் பாதுகாக்க எடுத்த முயற்சிகளை அறிந்துகொள்ள நீங்கள் அவசியம் படிக்கவேண்டும். அதாவது அவரது சாதி உணர்வு எல்லோரும் அறிந்தது தான் என்றாலும், வேதம் போல பவித்திரப்படுத்தப்படுகிற அவரது தோற்றத்துக்குப் பின் வருணாசிரமத்தை நிலைநிறுத்த அவர் எடுத்த முயற்சிகளை மறுக்கமுடியாத ஒருவர் சொல்லித் தெரிந்துகொள்வது முக்கியமானது என்று நினைக்கிறேன்.


நியோ: சாரு அவர்கள் பல Sources மூலமாக வேதத்தைப் படித்திருக்கலாம். முக்கியமாக Indologists, இந்தியவியல் மற்றும் மொழியியல் ஆய்வாளர்கள் (அதாவது அந்தத் துறையில் 'உலக அறிஞர்களால் மதிக்கப்படுபவர்கள்) எழுதியவற்றையும் அவர் படித்திருக்கக் கூடும்.

இருந்தாலும் இந்தச் சுட்டி தருகிறேன் :

http://www.people.fas.harvard.edu/~witzel/mwpage.htm

இந்தியவியல், வேத, சமஸ்கிருத அறிஞர் - பேராசிரியர் மைக்கேல் விட்சலினுடைய வலைமனை அது.

அதில் பல கட்டுரைகள் 'வேத' காலம் குறித்தும், ஆரியரின் சிந்துவெளி 'வருகை' குறித்தும், 'ரிக்' முதலான வேத நூல் தொகுப்புகள் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகளில் அலசுகிறார்.

முக்கியமாக அவரின் "Autochthonous Aryans?" ( "ஆரியர்கள் (இந்தியத் துணைக்கண்டத்தின்) பூர்வ குடிகளா?) என்கிற கட்டுரை வாசித்தே தீர வேண்டியது.

அதில் - ஆரியர்களின் 'படையெடுப்பு' என்பது நிகழாமல் போயிருக்கலாம்; ஆனால் ஆரியர்கள் குடியேறிகளே எனத் தெளிவாகக் காட்டுகிறார் (மிக நுட்பமாக); சில இடங்களில் Politically Correct speech உள்ளது; ஆனாலும் முழுவதுமாகப் படிப்பவருக்கு அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும் :)

கீதா சாம்பசிவம் போன்றவர்கள் (பொதுவாக பார்ப்பனர்கள்) - "தேவ பாஷை" என்கிற மாயையை விடாப்பிடியாக கட்டமைக்கப் பார்ப்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது!இவர்கள் வேண்டுமென்றால் - 'ரிக்'-இல் இருக்கும் ஒவ்வொரு 'சொல்லுக்கும்' அதன் பொருள் இன்னின்ன என்று ஒரு அகரமுதலி போடட்டும்!Linguists, Indologists ஆகியோரை வேண்டுமென்றே புறக்கணிக்கிற பார்ர்ப்பனிய, சமஸ்கிருத - இந்துத்துவ "ஆராய்ச்சியாளர்கள்" செய்யும் காமடிக்கு அளவில்லாமல் போகிறது நாளுக்கு நாள்!

Thursday, March 23, 2006

வேதம் பற்றி சாத்தான்!

சாரு ரொம்ப நாளாகவே வேதம் படித்து வருவதாகவும் (அதற்கு பணவுதவி தேவைபடுவதாகவும்) எழுதி வந்தார். இப்போது வேதம் பற்றி ஒரு கோணல் பக்க பதிவு எழுதியிருக்கிறார். ஏற்கனவே வேதத்தில் ஜாதி இருக்கிறதா என்று தங்கமணி நீண்ட பதிவு போட்டார். அதை நான் (தங்கமணி பதிவில் படிக்கும் பின்னூட்டங்கள், அதை முன்வவத்த விளங்கங்கள், இதனால் ஏற்படும் அலுப்பு காரணமாய்) முழுமையாய் படிக்க வில்லை. ஆனால் சாரு எழுதியதை முழுமையாய் ஒரே மூச்சில் படித்தேன்.

சாரு எழுதுவதில், அன்னத்தை விட எல்லாம் லாவகமாக, பால் தண்ணீர் கொழுப்பு, ப்ரோட்டீன் என்று தனித்தனியாக பிரித்து, சிலவற்றை மட்டும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது என் அணுகுமுறை. அந்த வகையில் இந்த பதிவை சீரியசாய் எடுக்க லாவகம் மட்டும் காரணமில்லை. நான் வேதங்களை படித்ததில்லை, அது குறித்து பெரிய முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ராகுல் சாங்கிருத்தியாயன் போன்றவர்கள் ரிக்வேதம் பற்றி எழுதியுள்ள எல்லாவற்றையுமே, பலகாலம் முன்பே படித்திருக்கிறேன். பிறகு அப்படி இப்படி பீராய்ந்திருக்கிறேன். அந்த வகையில் சாரு சொல்வது போல வேதத்தில் துவேஷமே மட்டுமே மிகுதியாய் உள்ளதாகாவே எனக்கும் தோன்றுகிறது. மாற்று கருத்தை நிறுவ நினைப்பவர்கள், கொஞ்சம் மாற்றிச் சொல்லி பார்கலாம். மீண்டும் ஒரு விவாததை தொடங்க தயக்கமாய்தான் இருக்கிறது. ஏனேனில் திறந்த விவாத மனப்பான்மையுடன், முன்முடிவை நிறுவ முயலாமல், அறியாத பக்கத்தை அறிய முயன்று தங்கமணியின் பதிவில் யாரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட அக்கப்போர்களை தாண்டாமல், தவிர்காமல், விவாதம் துளிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

பிகு: சாத்தான் என்று சொன்னதை சாரு பாராட்டாகவே எடுத்துகொள்வார் என்று திடமாய் நம்புகீறேன்.

Tuesday, March 21, 2006

மூன்றாவது பதிவு.

தமிழ்மணத்தில் பதிவை சேர்க்க மூன்று பதிவுகள் படையல் கேட்கிறது. அதனால், எப்படியும் நிறய பதிவுகள் போடப்போகிறோம் என்ற தைரியத்தில், இப்படி ஒரு பதிவு போட்டு சாமியை ஏமாற்றுவது குற்றமல்ல என்று தோன்றுகிறது. இங்கே பின்னூட்டமாய் சேமிக்காத எனது அண்மைக்கால பின்னூட்டங்களை இட்டிருக்கிறேன். குறிப்பாக ரவி ஸ்ரீனிவாஸ் பற்றி காட்டமாக எழுதியவை. இது குறித்து பேச, இன்னொரு சந்தர்ப்பம் அல்லது கட்டாயம் நிச்சயமாய் ஏற்படும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

'நாறுவது மனம்'- பின்னூட்டங்களுக்கு பதில்.

எனது 'நாறுவது மனம்' என்ற பதிவில் வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இது.

அந்த பதிவின் முதன்மை நோக்கம் வில்சனின் கட்டுரையை முன்வைப்பதும், முடிந்தால் அதை முன்வைத்து ஒரு விவாத்தை தொடங்குவதும். ஆனால் அதற்கு முன் வெங்கட்டின் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் படித்ததால், ஜோசஃப் அவர்கள் வெளியிட்ட கருத்து குறித்து (மற்ற பல விமர்சனங்கள் இருந்தாலும் இதை மட்டும் முக்கியமானது என்று நினைத்ததால்) மறுப்பு மற்றும் விமர்சனத்தை முன்வைக்க நேர்ந்தது. வெங்கட்டின் பதிவு பற்றி ஒரே ஒரு விமர்சனத்தை மட்டுமே முன் வைத்திருந்தேன். அது வெங்கட் எழுதியுள்ளது போல, ஜெயஸ்ரீ பாராட்டியுள்ளது போல, விஷயம் அத்தனை எளிதானது அல்ல என்பது மட்டுமே. நான் வெங்கட்டின் நோக்கத்தை அக்கறைகளை சந்தேகிக்கவில்லை என்பதை, எனது பழைய பதிவில் அவர் பதிவை நேர்மறையாய் குறிப்பிட்டிருப்பதையும், அதற்கு முன் அவர் பதிவில் இட்ட பின்னூட்டத்திலும் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு ஒற்றை வரி விமர்சனம் அவருக்கு (யாருடய நோக்கம் என்று தெளிவாக சொல்லாவிட்டாலும்) மற்றவர்களின் நோக்கத்தை பற்றி சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
வெங்கட் எழுதியது கீழே இதாலிக்கில் தரப்படுகிறது.

வெங்கட் எழுதியது:


>வெங்கட்டின் பதிவு, அதில் தொடர்ந்த மறுமொழிகளை பார்தால், வில்சனின் கட்டுரை பெரிதாய் படிக்கப் பட்டதாக தெரியவில்லை.

நான் படித்திருக்கிறேன். அதிலிருக்கும் பெரும்பாலான விடயங்களை நான் மறுக்கவில்லை. இதையொழிக்க ஆணிவேராகிய சாதியை ஒழிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் அதை ஒழிக்கக் கைக்கொள்ளும் ஒற்றைப்படைத்தனமான வழிமுறைகளை மட்டுமே நான் விமர்சித்து, மாற்றுவழிகளின் சாத்தியங்களில் ஒன்றை முன்வைத்தேன்.

அதே ஒற்றைப்படைத்தனமான வாதங்களை நானும் மேற்கொள்ளாததால் என் வாதங்கள் முற்றாகத் திசைதிருப்பப்படுவதைக் காணமுடிகிறது. நம்மில் இன்றைய சமூகத்தில் அறிவியலின் பங்கு குறித்து தெரிந்து கொண்டவர்கள்கூட அதை புறக்கணிப்பதின் நோக்கத்தை நான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. (One can imagine very well where India might be today had it not supported 'information based' economy. The way it drastically changes the landscape is obvious be it economy, development or respect from other countries).திரு. வில்ஸனின் ஒரே ஒரு விடயத்தை மட்டும் என்னால் முழுமையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை

>இந்த அவலத்தை ஒழிப்பதில் தடையாக இருக்கிறதே ஒழிய, தொழில்நுட்பக் குறைவோ, நிதிநிலை பற்றாக்குறையோ, ஒரு அங்க்கீகரிக்கப் பட்ட சட்டகம் ஒன்று இருப்பதோ இல்லாதிருப்பதோ அல்ல பிரச்சனை.

பிற நாடுகளில் இதற்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைக் காண்பவன் என்ற ரீதியில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நாம் இதில் நுட்பத்தின் பயன்பாட்டில் இன்னும் இம்மிகூட முன்னேறவில்லை. இதை மறுத்து இல்லை நாம் இதில் கரைகண்டுவிட்டோம் ரீதியில் யாராவது மார்தட்டிக்கொண்டிருந்தால் ஒன்று அவர்களின் அறியாமைக்கு நான் வருத்தப்பட வேண்டும், அல்லது அவர்களின் நோக்கங்களை நான் சந்தேகிக்க வேண்டும். மற்றும் நிதிநிலை; இந்திய பட்ஜெட்டில் R&D க்கான ஒதுக்கீட்டில்

2000 : Atomic Energy
3000 : DRDO
3610 : Space
2160 : Agriculture
1750 : CSIR
1746 : DST0
534 : Biotech
2774 : UGC, etc.
1718 : Tech. Ed.
1436 : Medicine

இதில் biotech, medicine, Agri மூன்றும்தான் சுகாதாரம் சார்ந்தவை. இது இராணுவம் சம்பந்தமான space, Atomic Energy, DRDO க்கு ஒப்பிடுகையில் மிக மிகக்குறைவு. ஆஹா, நமக்கு இந்திய அரசு தாராளமாகப் பணம் தருகிறது என்று நினைத்துக்கொண்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். வில்ஸனின் ஒத்துக்கொள்ள முடியாத இந்த ஒரே விடயத்தைப் பற்றித்தான் என்னுடைய அக்கறையே.

எனது பதில்: வெங்கட் தனது பதிவில் சொன்னவை இந்த பிரச்சனை குறித்து சிந்திக்கத் தொடங்கும் யாருக்கும் தோன்றும் பாதையில்தான் போகிறது. ஆனால் நவீன கருவிகளை அரசாங்கம் அளிக்க வேண்டும், அரசாங்கம் நவீனப்படுத்த வேண்டும்(வெங்கட்டின் பதிவிற்கு ஏனோ இப்போது மீண்டும் போக இயலவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை அதை படிக்க இயலவில்லை) என்று சொல்வதில் மட்டும் தீர்வு இல்லை என்பதுதான், வில்சனின் கட்டுரை மற்றும் இந்த புத்தகத்தை படிப்பவர்கள் உணரக்கூடும் என்பது மட்டுமே நான் சொல்ல வருவது. வெங்கட் எழுதிய விஷயங்கள் குறித்து விரிவாய் பிறகு வருகிறேன். ஆனால் அவர் சொல்வது போல் "அறிவியலின் பங்கை" நானோ அல்லது மற்ற எவருமே புறக்கணிக்க முயலவில்லை. ஒரு வேளை அப்படி தோற்றமளிப்பதாய் நினைத்து கொண்டு, என் நோக்கத்தை வெங்கட் சந்தேகப்பட்டால், அதனால் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் இருபது ஆண்டுகளாய் துப்புரவு தொழிலாளர்களோடு பிறந்து, அவர்களுடன் கலந்து, களப்பணி ஆற்றி வருபவர்களின் நோக்கங்களை, கணணி முன்னால் உட்கார்ந்து கொண்டு சந்தேகப்பட்டால், அது ரொம்ப ரொம்ப ஓவராய் இருக்கும்.

அறிவியல், தொழில்நுட்பம், நவீனம் எதன் பங்கையும் நான் மறுக்கவில்லை. நிச்சயமாக அறிவியலும், தொழில் நுட்பமும், நவீனம் சார்ந்த மனமாற்றமும், காலமும்தான் இந்த சமூக அவலத்திலிருந்து மக்களை விடுவிக்கும். ஆனால் வெங்கட்டே கணக்கு காட்டுவது போல, இராணுவத்திலும் அணு விண்வெளி ஆராய்சிகளில் இத்தனை முதலீடு செய்யும் அரசு, இந்த விஷயத்தில் மெத்தனமாய் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது? அதைத்தான் வில்சன் கேட்கிறார். இந்த அவலத்தை ஒழிப்பதில் லோக்கலிலிருந்து மைய அரசு வரை, சாதிய உளவியல் அடிப்படையில் சிந்தித்து பழகிவிட்டதன் பாதிப்பு இருப்பதை பற்றி பேசாமல், இந்த பிரச்சனையை அணுக முடியாது என்பது மட்டுமே நான் சொல்ல வருவது.

மற்றபடி இந்த அவலத்தை ஒழிக்க சாதியை ஒழித்தால்தான் முடியும் என்று நான் நினைக்கவில்லை. சாதியை ஒழிப்பது என்பது வேறு, அதை பற்றி விவாதிக்கும் போது இந்து மதம் பற்றி பேசாமலும், (ஒழித்து கட்டினால்தான் தீர்வு ஏற்படும் என்று இல்லை, ஆனால்) அதை கணக்கில் கொள்ளாமலும் இருக்க முடியாது. ஆனால் இந்த அவலம் பற்றி பேச, அது பற்றியெல்லாம் எதுவும் பேசவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தீர்வுகள் என்று நினைப்பவற்றை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல்களை, முட்டுகட்டைகள் மெத்தனங்களை பற்றியும், அதன் பிண்ணணி பற்றியும் பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி வெங்கட்டின் மாற்றுவழிகளுக்கான வாதங்கள் எதையும் சிறிய அளவில் கூட திசை திருப்பும் அளவிற்கு எதையுமே இன்னும் நான் சொல்லவில்லை. நான் அவரின் அக்கறையை மதிக்கிறேன். பதிவில் விமர்சனமாக சொல்லப்பட்ட வேறு எந்த வரியும், அவரை நோக்கி சொல்லப் பட்டதல்ல. ஒரு விவாதத்தின் மிகவும் தொடக்கத்தில், ஒருவரி விமர்சனத்தை இப்படி எதிர்கொண்டால் விவாதத்தை தொடர்வதும், உவப்பில்லாத கருத்துக்களை சொல்வதும் சிக்கலாகும்.

ஜோசஃப் எழுதியதை முன்வைத்து நான் எழுதியதை, வெங்கட் ஒப்புகொண்டதற்கு நன்றி. வெங்கட் பதிவில் சில வரிகள், ஜோசஃபின் ஒப்புமையை ஒப்புகொண்டு பதிலெழுதியதாய் தோன்றியதால், மீண்டும் ஒரு வரியில் குறிப்பிட்டேன். வெங்கட் தெளிவு படுத்திய பின், என் வரியை திரும்ப பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. மன்னிக்கவும், நன்றி!

ஜெயஸ்ரீக்கு,

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் இனி பின்னூட்டமிட மாட்டேன் என்று, ஏதாவது புண்பட நேர்ந்து, முடிவெடுத்திருந்தால் வருத்தமாக இருக்கிறது. எனக்கு அப்படி நோக்கம் கிடையாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சில கருத்துக்களை யாரேனும் புண்படக் கூடும் என்பதர்காக சொல்லாமல் இருப்பதும் கடினம்.

ஜெய்ஸ்ரீ, தங்கமணியின் பதிவில் எழுதி பிரபலமான பின்னூட்டம் மீது, விமர்சனம் நிறைய இருந்தாலும், அது ஜெய்ஸ்ரீ தன் மனதில் உள்ளதை நேர்மையாய் முன்வைத்ததாகவே நினைக்கிறேன். (அந்த ஒரே காரணத்தால் மட்டும் அதை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்பது மட்டுமே நான், ஜோசஃப் பற்றி சொல்லும்போது, குறித்தது.) ஆனால் ஜெய்ஸ்ரீஎழுதியதை மற்றவர்கள் கொண்டாடிய விதம்தான் ஆபாசமாகவும், நேர்மை குறைவு கொண்டதாகவும் எனக்கு தோன்றியது. அந்த கொண்டாட்டத்தின் காரணமாகவே சிலருக்கு கோபம் வந்திருக்கலாம். எனினும் அது குறித்து இப்போது, இந்த பிரச்சனைக்கான சந்தர்ப்பத்தில் பேச அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

கீதா ராமசாமி புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையை என் மெயின் பதிவில் அளித்திருக்கிறேன். அதில் பல ஆண்டுகளுக்கு இந்த அவலம் குறித்த மிக அடிப்படையான கேள்விகளே தனக்கு எழவில்லை என்பதை மிக நேர்மையாய் ஒப்புக்கொண்டிருக்கிறார். துப்புரவு தொழிலாளர்களுடன் வேலை செய்து, அவர்கள் வாழ்க்கை பற்றி அருகிலிருந்து அறிந்த ஒருவருக்கே, சில கேள்விகளும் அதன் தீவிரமும் உறைக்க பல ஆண்டுகளும், சில சம்பவங்களும் சில தொடர்புகளும் தேவைப்பட்டிருக்கிறது. அதனால் யாரையும் நோக்கி விரல் உயர்த்துவது என் நோக்கமல்ல. வெகுளித்தனமும், சில மேம்ப்போக்கான வாதங்களையும் கவர்ச்சிகரமான மொழியில் முன்வைத்ததும், அதை தங்களுக்கு உவப்பானது என்ற ஒரே காரணத்திற்த்காக, இந்த அளவு glorify செய்து கொண்டாடும் ஆபாசம்தான் குமட்டுகிறது (பலமுறை சொல்லிவிட்டாலும், குமட்டினால் குமட்டுகிறது என்றுதானே சொல்லமுடியும்.)

மற்றபடி வேறு ஒரு விவாதத்தின் சந்தர்பத்தில் ஜெய்ஸ்ரீ எழுதியது பற்றி நான் பேசலாம். என் பதிவிற்கு பின்னூட்டமிடுவது அவர் விருப்பம் சார்ந்தது என்றாலும், அவருடய அக்கறைகளையும் நான் மதிக்கிறேன். எதையும் மனதில் வாங்காமல் நான் புறக்கணிக்க முயல்வதில்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நன்றி.

Tuesday, March 07, 2006

உரசலாவது கேட்கட்டும்.

எதிர்வினை/நேர்வினை, பக்கவினை/தொலைவினை, இணைவினை/செங்குத்துவினை, ஆக்கவினை/அழிவுவினை மற்றும் ஈகோவினை, வசைவினை இவைகளினூடாக வாதம், விவாதம், வாந்தி, பேதி, தர்க்கம், குதர்க்கம், ஆராய்சிக்கான முயற்சியாய்...

இணையத்தில் பிறர் பதிவுகளில் எழுதும் பின்னூட்டங்களை சேமித்து வைப்பதை முதன்மை நோக்கமாய் கொண்டு இந்த பதிவை தொடங்கியிருக்கிறேன். கடைசி பதிவில் பின்னூட்டங்களாக சேமிக்கத் திட்டம். குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை, காலத்தின் போக்கில் விளையும் தெளிவில், எழுதியதை விரிவாக மீண்டும் எழுதவும், பதில்கள் எதிர்வினைகளை எதிர்கொள்ளவும், இயன்ற அளவில் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு தனிப்பதிவாய் எழுதவும் திட்டம் உள்ளது. உடனடியாய் மறுமொழியாத முதிர்ச்சியை பெற்று, ஈகோவை முடிந்தவரை கழற்றி வைத்து, காலம் கடந்து எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாகவும், கடந்து போன பழைய விவாதங்களையும் தூசி தட்டி எடுத்து புதிதாய் பார்க்கவும், மறுபடி எழுதவும் இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அறிதலை நோக்கமாய் கொண்ட விவாதமாய் எவையெல்லாம் தேறும் என்பது குறித்து எந்த முன்நம்பிக்கையும் கொள்ளாமல், சாத்தியமான எல்லாவற்றை பற்றியும் முடிந்தவரை விரிவாய் (காலம்தாழ்த்தியேனும்) கணக்கில் கொள்ள விழைகிறேன். குறைந்த பட்சம் வெட்டி விவாதங்களை மெயின் பதிவில் தவிர்த்து உருப்படியானதாய் கருதுபவற்றை மட்டும் அங்கே எழுத இது உதவும் என்று தோன்றுகிறது.

(இங்கே தமிழ்மணம் கருத்துப்பட்டை இடப்போவதில்லை என்பதால், இந்த பதிவின் மறுமொழி நிலவரம் தமிழ்மணத்தில் தோன்றாது.)

Site Meter